புனே : வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, கே எல் ராகுல் செய்த பீல்டிங் தவறால் கேப்டன் ரோஹித் சர்மா கோபம் அடைந்தார்.
இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி புனேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. வங்கதேசம் நல்ல துவக்கம் பெற்று, மிடில் ஓவர்களில் விக்கெட்களை இழந்தாலும் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது.

இந்த நிலையில், 31வது ஓவரில் ஷர்துல் தாக்குர் பந்து வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை சந்தித்த முஸ்பிகுர் ரஹீம் பந்தை பேக்வேர்டு பாயின்ட் திசையில் தட்டி விட்டு ஒரு ரன் ஓடினார். அப்போது இந்திய அணியின் சிறந்த பீல்டரான ஜடேஜா பந்தை எடுத்து விக்கெட் கீப்பர் திசையில் டைரக்ட் ஹிட் அடித்தார்.
ஆனால், எதிர்முனை பேட்ஸ்மேன் தௌஹித் க்ரீசுகுள் வந்து விட்டார். டைரக்ட் ஹிட் அடித்த பந்து வேறு திசையில் ஓடியதால் ரஹீம் - தௌஹித் மீண்டும் இரண்டாவது ரன் ஓடினர். அப்போது விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் பந்தை எடுத்து மீண்டும் எதிர்முனையில் ரன் அவுட் செய்ய முயற்சி செய்தார்.
ஆனால், அப்போதும் டைரக்ட் ஹிட் ஆகி பந்து ஸ்டம்ப்பை தகர்த்த பின் பந்து வேறு திசையில் ஓடியது. அப்போது மூன்றாவது ரன்னை ஓடத் துவங்கியது ரஹீம் - தௌஹித் ஜோடி. இதைக் கண்ட ரோஹித் சர்மா கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
ஸ்டம்ப்பில் படும்படி டைரக்ட் ஹிட் அடித்து விக்கெட்டை வீழ்த்துவது கிரிக்கெட்டில் நல்ல விஷயம்தான். ஆனால், பேட்ஸ்மேன் கிரீஸ் அருகே இருக்கும் போதும் டைரக்ட் ஹிட் அடிக்க முயற்சி செய்வது தேவை இல்லாதது. இந்த தேவை இல்லாத வேலையை ஜடேஜா, ராகுல் என இருவரும் அடுத்தடுத்து செய்தது கேப்டன் ரோஹித் சர்மாவை இன்னும் சூடாக்கியது.
ஷர்துல் தாக்குர் எதிர்முனையில் ராகுல் வீசிய பந்தை பிடித்து இருக்கலாம். ஆனால், அவரும் டைரக்ட் ஹிட் ஆகிறதா? என பார்த்து பந்தை கோட்டை விட்டார். எனினும், இந்தப் போட்டியில் வங்கதேச அணி 50 ஓவர்களில் 256 ரன்கள் மட்டுமே எடுத்தது.