புனே : வங்கதேச அணியின் துவக்க வீரர்கள் தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் ஜோடி மிக சிறப்பாக பும்ரா, சிராஜ் வேகப் பந்துவீச்சை சமாளித்து ரன் குவித்தது.
அவர்கள் இருவரால் தான் வங்கதேசம் 200 ரன்களையே கடந்தது. மேலும், முதல் விக்கெட் விழும் வரை இந்தியா பதற்றத்தில் இருந்தது.
தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் தெளிவாக திட்டமிட்டே இந்தப் போட்டியை அணுகி இருக்கின்றனர். அதனாலேயே, இந்திய அணியின் விக்கெட் வீழ்த்தும் திறன் கொண்ட பும்ரா, சிராஜ் ஜோடியை சமாளித்து ரன் குவித்தனர். எப்படி இதை செய்தனர்?
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பும்ரா, சிராஜ் முதலில் பந்து வீசினர். எப்படியும் இவர்கள் ஓவர்களில் ஒரு விக்கெட்டாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் டெஸ்ட் போட்டி போல முதல் ஐந்து ஓவர்களை ஆடினர்.

இருவரும் சேர்ந்து முதல் 5 ஓவர்களில் வெறும் 10 ரன் எடுத்தனர். அதன் பின் சிராஜ், ஷர்துல் தாக்குர் மற்றும் பாண்டியா வீசிய 3 பந்துகளை குறி வைத்து அடித்து ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர். பாண்டியா 3 பந்துகளை வீசிய பின் காயத்தால் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இவர்களை வீழ்த்த முடியாமல் 14 ஓவர்கள் வரை திணறியது இந்திய அணி. பின்னர் எனினும், ஸ்பின்னர்கள் பந்து வீச வந்த உடன் அவர்கள் ரன் சேர்க்கும் வேகம் குறைந்தது. பின் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தன்சித் ஹசன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
27 ஓவர்கள் வரை நிதான ஆட்டம் ஆடி தாக்குப் பிடித்த லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது. அத்துடன் இருவருமே அரைசதம் அடித்தனர். இவர்கள் நல்ல அடித்தளம் அமைக்காமல் போயிருந்தால் வங்கதேசம் 200 ரன்களையே தாண்டி இருக்காது.
இவர்கள் போட்டிக்கு முன்பே தெளிவாக திட்டமிட்டு வந்ததால் தான் பும்ரா ஓவர்களில் நிதான ஆட்டம் ஆடியும், மற்ற வீரர்களை குறி வைத்தும் ரன் சேர்க்க முடிந்தது.