மும்பை : 2023 உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு மனதளவில் பெரிய நெருக்கடியை கொடுத்து இருக்கிறது இந்திய அணி.
உலகக்கோப்பை தொடர் அதன் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக் சுற்று முடிவடைந்து அரை இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் அரை இறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளும், இரண்டாவது அரை இறுதியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளும் மோத உள்ளன.

இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பெரிய பலவீனம் என எதையும் சொல்ல முடியாது. ஆனால், நியூசிலாந்து அணி அரை இறுதியில் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்க நினைத்தால் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தன. அந்த இரண்டையும் இந்திய அணி நெதர்லாந்து போட்டியில் உடைத்து விட்டது.
முதல் வாய்ப்பாக நியூசிலாந்து அணி கருதியது, இந்திய அணியின் டாப் ஆர்டரை விரைவாக வீழ்த்தி மிடில் ஆர்டரை முதல் 20 ஓவர்களுக்குள் களத்துக்கு கொண்டு வந்து அழுத்தம் கொடுக்கலாம் என்பது. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் பெரிய அளவில் ரன் குவிக்க வாய்ப்பில்லை என்ற எண்ணமே அதற்கு காரணம்.
ஆனால், நெதர்லாந்து போட்டியில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி அரைசதம் அடித்து 30 ஓவர்களில் ஆட்டமிழந்த பின், கடைசி 20 ஓவர் முழுவதும் ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் நின்று ஆடி 200 ரன்களுக்கும் மேல் கூட்டணி அமைத்தனர். அரை இறுதிக்கு முன்னர் இருவரும் சதம் அடித்து தங்கள் திறமையை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக பதித்தனர். நியூசிலாந்து அணி இனி முதல் 5 விக்கெட்களையும் வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணியை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையே உள்ளது.
நியூசிலாந்து அணியின் மற்றொறு வாய்ப்பு இந்தியாவின் பந்துவீச்சு தான். இந்தியா சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்துவதால் அவர்களே ஆளுக்கு 10 ஓவர்கள் என்ற கணக்கில் 50 ஓவர்களையும் வீச வேண்டும். அதனால், குறிப்பிட்ட ஒரு பந்துவீச்சாளரை குறி வைத்து ரன் குவித்து இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்து ரன் குவிக்கலாம். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியதால் கூடுதல் ஆல் ரவுண்டர் இல்லை என்பதை நியூசிலாந்து தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிடலாம்.
ஆனால், இதையும் உடைக்கும் வகையில் இந்திய அணி நெதர்லாந்து போட்டியில் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய முதன்மை பந்துவீச்சாளர்களை தவிர்த்து, விராட் கோலி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மாவும் பந்து வீசினர். அதில், விராட் கோலி, ரோஹித் சர்மா விக்கெட்டும் வீழ்த்தி பகுதி நேர பந்துவீச்சாளர்களாகவும் தங்களை நிரூபித்தனர். பகுதி நேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய வகையில் கேப்டன் ரோஹித் சர்மா நியூசிலாந்து அணிக்கு செக் வைத்து இருக்கிறார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் 2019 உலகக்கோப்பை அரை இறுதியிலும் மோதி இருந்தன. அந்தப் போட்டியில் இந்தியா டாப் ஆர்டரை முதல் ஐந்து ஓவர்களுக்குள் இழந்து பின் போராடி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது. அந்த மோசமான நினைவு இந்திய அணியை விட்டு அகலவில்லை.
அதே சமயம், இந்திய அணி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தன்னை எந்த சூழ்நிலைக்கும் தயார்படுத்திக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதி தான் நெதர்லாந்து போட்டியில் இந்தியாவின் ஐந்து பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவித்ததும், ஒன்பது பந்துவீச்சாளர்கள் பந்து வீசியதும். இந்தியாவின் இந்த மைன்ட் கேமுக்கு பின் நியூசிலாந்து அணி நிச்சயம் அழுத்தத்தை உணர்ந்து இருக்கும்.