IND vs NZ : அதிரடி ஆல்-ரவுண்டரை இறக்கும் நியூசிலாந்து.. இந்தியாவுக்கு எதிராக அவரின் Stats இதுதான்
மும்பை : 2023 உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முக்கியமாக ஒரு மாற்றத்தை செய்ய உள்ளது.
அந்த அணியின் ஆல் - ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் அணியில் இடம் பெறாமல் ஓய்வில் இருந்த நிலையில், அவர் இந்திய அணிக்கு எதிரான அரை இறுதியில் அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.

ஜேம்ஸ் நீஷம் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ஆவார். அவர் பேட்டிங்கில் அதிரடி ஆட்டம் ஆடுவார் என்ற பெயர் உண்டு. அரை இறுதிப் போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானம் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் என்பதால் கடைசி நேரத்தில் ஜேம்ஸ் நீஷம் தன் அணிக்காக அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவிப்பார் என அவருக்கு பில்டப் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், உண்மையில் அவர் ஒருநாள் போட்டிகளில் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. அதிலும் இந்திய அணிக்கு எதிராக அவர் மிக சுமாராகவே ஆடி இருக்கிறார். அவரது பேட்டிங், பவுலிங் புள்ளி விவரத்தை பார்த்தாலே அது தெரிந்து விடும்.
ஜேம்ஸ் நீஷம் இதுவரை 72 ஒருநாள் போட்டி இன்னிங்க்ஸ்களில் பந்து வீசி இருக்கிறார். அதில் 71 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அவரது எகானமி ஓவருக்கு 6.26 ஆகும். அவர் இந்தியாவுக்கு எதிராக 12 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதில் அவரது எகானமி ஓவருக்கு 6.45 ஆகும். இதை வைத்து பார்த்தால் பந்துவீச்சில் நீஷம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாததை புரிந்து கொள்ளலாம்.
65 ஒருநாள் இன்னிங்க்ஸ்களில் பேட்டிங் செய்து 1495 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 28.20. ஸ்ட்ரைக் ரேட் 99.93 ஆகும். இந்தியாவுக்கு எதிராக 10 இன்னிங்க்ஸ்களில் 197 ரன்கள் எடுத்துள்ளார். அதன் சராசரி 22, ஸ்ட்ரைக் ரேட் 95.16 மட்டுமே. எனவே, எந்த வகையிலும் ஜேம்ஸ் நீஷம் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை என்பதே உண்மை. அரை இறுதிப் போட்டியிலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு குறைவு தான்.


Click it and Unblock the Notifications