அது மட்டும் நடக்காது.. அஸ்வினை டீமில் சேர்ப்பதில் சிக்கல்.. கை விரித்த டிராவிட் - ரோஹித் சர்மா
தரம்சாலா : 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது. அந்தப் போட்டியிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என கூறப்படுகிறது.
அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஆடிய நான்கு போட்டிகளில் அஸ்வின் ஒரு போட்டியில் மட்டுமே ஆடி இருக்கிறார். சென்னையில் நடந்த முதல் போட்டியில் மட்டுமே அஸ்வின் இடம் பெற்றார்.

சென்னை ஆடுகளம் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்தியா மூன்று ஸ்பின்னர்களை களமிறக்க முடிவு செய்தது. அதனால், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் உடன் மூன்றாவது ஸ்பின்னராக அஸ்வின் அணியின் சேர்க்கப்பட்டார்.
அதன்பின் நடந்த மூன்று போட்டிகளிலும் பிட்ச் காரணமாக இரண்டு ஸ்பின்னர்களை மட்டுமே பயன்படுத்தியது இந்திய அணி. அஸ்வின் மாற்று வீரராகவே அணியில் இருந்தார். இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியிலாவது அஸ்வின் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இடம் பெறாத நிலையில், அவர் இடத்தில் அஸ்வினை சேர்க்க வேண்டும் என சிலர் கூறியும் வருகின்றனர்
ஆனால், அது மட்டும் நடக்கவே நடக்காது என்று கூறுகிறார்கள் விமர்சகர்கள். அதற்கு காரணம், போட்டி நடைபெறும் தரம்சாலா மைதானம் தான். அந்த மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம். இந்த உலகக்கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகளில் எல்லாம் வேகப் பந்துவீச்சாளர்களையே அணிகள் அதிகம் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளன.
இந்த உலகக்கோப்பை தொடரில் தரம்சாலாவில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் இடையில் நடந்த முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை விட குறைவாக ஸ்பின் பந்துவீச்சை பயன்படுத்திய வங்கதேசம் வென்றது. அடுத்து நடந்த இங்கிலாந்து - வங்கதேசம் இடையிலான போட்டியில் அதிக வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய இங்கிலாந்து அணி வென்றது.
அடுத்து கடைசியாக நடைபெற்ற நெதர்லாந்து - தென்னாப்பிரிக்கா போட்டியில் 17 ஓவர்கள் மட்டுமே ஸ்பின் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. எனவே, இந்த ஆடுகளத்தில் 20 ஓவர்களுக்கு மேல் ஸ்பின் பந்துவீச்சை பயன்படுத்துவது பாதகமாக கூட முடியலாம். பவுண்டரி எல்லைகளும் இரண்டு புறம் 65 மீட்டர் மட்டுமே உள்ளது. அதனால், ஸ்பின் பந்துகளில் அதிக சிக்ஸ் அடிக்கும் வாய்ப்பும் உள்ளது.
இந்த சிக்கல் இருப்பதால் அஸ்வினை அணியில் சேர்ப்பது கடினம். நிச்சயம் அஸ்வினை சேர்க்க முடியாது என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா கை விரித்து விடுவார்கள். பாண்டியாவுக்கு பதிலாக ஷமி இடம் பெறவே அதிக வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications