உணர்ச்சிவசப்பட்ட ஷமி.. ஓடி வந்து தட்டிக் கொடுத்த ரோஹித் சர்மா.. நெகிழ்ச்சி சம்பவம்
மும்பை : இலங்கை அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய பின் முகமது ஷமி உணர்ச்சிவசப்பட்டார். அவர் கீழே முட்டி போட்டு அமர்ந்து விட்டார்.
அவர் இந்தப் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதோடு இந்தியாவுக்காக உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
அதனால், அவர் மகிழ்ச்சியின் உச்சியில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். அப்போது கேப்டன் ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் அவரை பாராட்டி, தட்டிக் கொடுத்தனர்.
இந்தப் போட்டிக்கு முன்னதாக முகமது ஷமி உலகக்கோப்பை தொடரில் 13 போட்டிகளில் 40 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதே சமயம், ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜாகிர் கான், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் இருந்தனர். அவர்கள் 40 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

இந்த நிலையில்ம் ஷமி இலங்கை அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி ஸ்ரீநாத், ஜாகிர் கான் சாதனைகளை முறியடித்தார். மேலும், இந்த உலகக்கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள ஷமி 14 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
இதனை அடுத்து அவர் உணர்ச்சி பொங்க காணப்பட்டார். 5வது விக்கெட்டை வீழ்த்திய உடன் கீழே முட்டி போட்டு அமர்ந்து விட்டார். அப்போது ஜடேஜா ஓடி வந்து அவரிடம் பாராட்டி பேசினார். கேப்டன் ரோஹித் சர்மா அவரை தட்டிக் கொடுத்து பாராட்டினார். இந்த சம்பவம் போட்டியில் நெகிழ்ச்சியாக அமைந்தது.
முன்னதாக இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 357 ரன்கள் குவித்தது. விராட் கோலி 88 ரன்கள், சுப்மன் கில் 92 ரன்கள் குவித்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி இமாலய இலக்கை நோக்கி ஆட வந்த நிலையில், போட்டியின் முதல் பந்தில் பும்ரா விக்கெட் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து சிராஜ் மூன்று விக்கெட்களை அள்ளினார். அடுத்து ஷமி வரிசையாக 5 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டினார். இலங்கை அணி 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.


Click it and Unblock the Notifications