மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணியின் தொடர் வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாத நமது பங்காளிகள் தொடர்ந்து இந்திய அணி மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளங்கள் மாற்றப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு அண்மையில் புதிதாக வைக்கப்பட்டது. இதேபோன்று இந்தியா பந்து வீசும் போது மட்டும் வேறு ஒரு பந்தை ஐசிசி வழங்குகிறது என்று ஒரு முட்டாள் தனமான குற்றச்சாட்டை வைத்து அகில உலக ஜோக்கர் என்ற பட்டத்தையும் அண்மையில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பெற்றார்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு சாதகமாக டாஸ் விழுவது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். சிக்கந்தர் பக்த் என்ற அந்த வீரர் பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் சேனலில் பேசியபோது இந்த குற்றச்சாட்டை வைத்தார். அதில் நான் உங்களுக்கு ஒரு சர்ச்சை விசயத்தை கூறட்டுமா? இந்தத் தொடரில் ரோஹித் சர்மா டாசிலே பிக்சிங் செய்து இந்தியாவுக்கு சாதகமாக விளையாடுகிறார்.
இதற்கு ஐசிசி அதிகாரிகளும் இந்தியாவுக்கு உடந்தையாக செயல்படுகிறார்கள். நீங்கள் கவனியுங்கள் டாஸ் வீசும் போது ரோகித் சர்மா டாசை எதிரணி கேப்டனிடம் இருந்து அதிக தூரம் வீசுகிறார். இதன் மூலம் டாசை எதிரணி கேப்டன் சென்று பார்க்க முடியாது. இதனை பயன்படுத்திக் கொண்டு போட்டி நடுவரும் இந்தியாவுக்கு சாதகமாக டாசை கூறுகிறார்கள் என்று ஒரு பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.
இதனை கேட்டதும் பாகிஸ்தான் டிவி தொகுப்பாளரே சிரிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தியாவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி பல குற்றச்சாட்டுகளை பல தரப்பினரும் வைக்கிறார்கள். அண்மையில் இந்தியாவுக்கு சாதகமாக டிஆர்எஸ் முடிவை மூன்றாம் நடுவர் மாற்றுவதாக பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா இந்தியா மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.