கொழும்பு : இலங்கை கிரிக்கெட் அணி வாரியத்தில் நடைபெற்று வரும் பிரச்சனை பெரிய அளவில் வெடித்திருக்கிறது. அந்த அணி சரியாக செயல்படவில்லை என்று கூறி இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது.
இந்த நிலையில் தான் கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் அரசு தலையிட்டதை எதிர்த்து இலங்கை கிரிக்கெட் அணியை ஐசிசி சஸ்பெண்ட் செய்திருக்கிறது. தமது பதவி பறிபோய்விட்டதால் கடுப்பான இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஷம்மி சில் வாவின் அறிவுறுத்தலின்படியே ஐசிசி இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிகிறது.

இதனால் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் ஐசிசி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதில் ஒரு படி மேல் போய் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் அர்ஜுன ரணதுங்கா ஜெய்ஷாவை கடுமையாக சாடிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்துவதே ஜெய் ஷா தான். இலங்கை கிரிக்கெட் வாரியம் ஜெய்ஷா கொடுக்கும் அழுத்தத்தால் அழிந்து வருகிறது.
இந்தியாவிலிருக்கும் ஒரு நபர் இலங்கையில் உள்ள கிரிக்கெட் வாரியத்தை நடத்தி வருகிறார். இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சில நிர்வாகிகளுடன் தொடர்பு இருப்பதால் ஜெய்ஷாவும் பிசிசிஐயும் இலங்கை கிரிக்கெட்டை கட்டுப்படுத்தி தாங்கள் சொல்லும்படி நடக்க வைக்கலாம் என்று எண்ணுகிறார்கள் என்றும் ரணதுங்கா குற்றச்சாட்டு இருக்கிறார்.
மேலும் ஜெய்ஷா இவ்வளவு சக்தி மிகுந்த நபராக இருப்பதற்கு காரணமே அவருடைய தந்தை மத்திய உள்துறை அமைச்சராக இருப்பது தான் என்றும் ரணதுங்கா சாடியுள்ளார். தற்போது ஐசிசி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் இலங்கை அணி ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பதால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பங்கு பெற முடியாத நிலை ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.