கராச்சி : பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோற்ற நிலையில், அந்த அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் பேசிய பேச்சுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
போட்டி முடிந்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பதில் சொல்ல வேண்டிய மிக்கி ஆர்தர், சம்பந்தமே இல்லாமல் இது ஐசிசி போட்டியா, இல்லை பிசிசிஐ போட்டியா என விமர்சனம் செய்து இருந்தார்.
அவர் வேண்டுமென்றே தோல்வியை திசை திருப்பும் வகையில் இவ்வாறு பேசி இருப்பதாகவும், இந்த தோல்வியில் இருந்து தப்பிக்கலாம் என அவர் நினைக்கிறார். ஆனால் அது முடியாது என அக்ரம் கூறினார்.

அதே போல, பாகிஸ்தான் மக்களின் உணர்ச்சிகளை தொடும் வகையில் பேசுவதாகவும், அது அவர் வேலை இல்லை எனவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொயின் கான் ஆவேசமாக கூறி இருக்கிறார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன 2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்துவது இது எட்டாவது முறை ஆகும்.
இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி எந்த இடத்திலும் வெற்றிக்காக போராடவே இல்லை. பேட்டிங்கில் 191 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அடுத்து இந்தியா சேஸிங் செய்த போதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சுப்மன் கில் 16 ரன்னிலும், விராட் கோலி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தது மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த ஆறுதல்.
இந்த நிலையில், இந்த மோசமான தோல்விக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்த அணியின் இயக்குனர் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், தோல்விக்கான காரணம் என்ன, பாகிஸ்தான் அணி அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதை பற்றி பெரிதாக பேசவில்லை.
மாறாக இந்திய ரசிகர்கள், பாகிஸ்தான் அணிக்கு எதிராக கோஷமிட்டனர் என்றும், பாகிஸ்தான் ரசிகர்கள் யாருமே மைதானத்தில் இல்லை எனவும், இந்தப் போட்டி ஐசிசி நடத்தும் தொடர் போல இல்லை, பிசிசிஐ நடத்தும் தொடர் போல ஒரு சார்பாக ஏற்பாடுகள் நடந்துள்ளது எனவும் குற்றம் சுமத்தினார்.
இது பற்றி பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வேகப் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறுகையில், "அவர் பேச்சை கேட்டால் என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவுக்கு எதிராக நீங்கள் என்ன திட்டங்கள் வைத்திருந்தீர்கள் என்பதை எங்களிடம் கூறுங்கள். அதைத்தான் நாங்கள் கேட்க விரும்புகிறோம், வேறு கதைகளை அல்ல. நீங்கள் இதிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? துரதிர்ஷ்டவசமாக உங்களால் அது முடியாது" என்று அக்ரம் கோபமாக கூறினார்.
"தோல்வியை அவர் திசைதிருப்ப முயல்வது மேலும் இதயத்தில் வலியைக் கொடுக்கிறது. அவர் நம்மை உணர்ச்சி வசப்படுத்த முயற்சிக்கிறார். அவர் தனது தொழிலில் கவனம் செலுத்த வேண்டும், வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். அவர் சொல்வது ஒரு வகையில் சரிதான், ஆனால் ஒரு பயிற்சியாளராக, அவர் இந்த விஷயங்களைச் சொல்லக் கூடாது" என்று மொயின் கான் கூறினார்.
பாகிஸ்தான் மக்களை, இந்தியாவுக்கு எதிராக உணர்ச்சிவசப்படுத்தி இந்த தோல்வியில் இருந்து தப்பிக்கலாம் என நினைத்த மிக்கி ஆர்தரின் நாடகம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.