தப்பு பண்ணிட்டே இருக்க.. இனிமே தான் உனக்கு கண்டம்.. இந்திய அணி வீரரை எச்சரித்த மிஸ்பா உல் ஹக்
மும்பை : இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து ஒரே தவறை செய்து வருவதாக சுட்டிக் காட்டி உள்ள முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், அதனாலேயே அவர் அணியில் வாய்ப்பை இழக்கப் போகிறார் என எச்சரிக்கை செய்துள்ளார்.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அனைத்து இந்திய வீரர்களும் இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஒருவரைத் தவிர. அவர் ஸ்ரேயாஸ் ஐயர்.
அவர் தொடர்ந்து புல் ஷாட் அடிக்க முயற்சி செய்து தன் விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார். இதனாலேயே உலகக்கோப்பை தொடரில் அவரால் பெரிய அளவில் ரன் குவிக்கவும் முடியவில்லை. இதை சுட்டிக் காட்டி இருக்கும் மிஸ்பா உல் ஹக் அவரை விமர்சனம் செய்துள்ளார்.
கடைசியாக அவர் ஆடிய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா சுப்மன் கில், விராட் கோலி என 2 முக்கிய விக்கெட்களை முதல் பத்து ஓவருக்குள் இழந்த நிலையில் களத்துக்கு வந்தார். ஒரு பெரிய இன்னிங்க்ஸ் ஆடி அணியில் தன் பெயரை நிலை நாட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் புல் ஷாட் ஆட வாய்ப்பே இல்லாத ஒரு பந்தை புல் ஷாட் அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், "அவர் ஷார்ட் பந்து வரும் என எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார். பல சமயம், ஷார்ட் ஆக வராத பந்துகளை கூட அவர் புல் ஷாட் அடிக்க முற்படுகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்தது போல அவர் ஷாட் அடிக்க முயற்சி செய்கிறார். எனவே, அவர் ஷார்ட் பந்துகள் குறித்து அதிகம் சிந்தித்து கொண்டே இருக்கிறார். அவர் மிகப் பெரிய சிக்கலில் சிக்கப் போகிறார்." என்றார்.
மேலும் இந்திய அணியில் அவருக்கு இடம் மறுக்கப்படலாம் என்பது குறித்து பேசும் போது. "நான் முன்பிருந்தே கூறுகிறேன், கே எல் ராகுல் ஒரு தரமான வீரர். அவர் ஐந்தாம் வரிசையில் இறங்குவதால் அவர் தாமதமாக களத்துக்கு வர நேரிடுகிறது. அவர் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும். அவர் நான்காம் வரிசைக்கு மாறினால் பாண்டியா அணிக்கு திரும்பும் போது, ஸ்ரேயாஸ் நிலைமை மோசமாகி விடும்." என்றார்.


Click it and Unblock the Notifications