மும்பை : 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சில முக்கிய மாற்றங்களை அணியில் செய்ய உள்ளது.
முகமது ஷமி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
ஆனாலும், அவரை இந்தியா அடுத்து ஆட உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அணியில் இருந்து நீக்கக்கூடும் என் தகவல்கள் வெளியாகின்றன.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சரியான அணியை தேர்வு செய்து முதல் ஐந்து போட்டிகளிலும் வெற்றிகளை பெற்றது. ஆனால், ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததால் இந்திய அணி சிக்கலில் மாட்டிக் கொண்டது. இந்திய அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டரான அவர் காயம் காரணமாக இந்திய அணியின் மீதமுள்ள நான்கு உலகக்கோப்பை லீக் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறார்.

ஷர்துல் தாக்குர் பேட்டிங் செய்யும் திறன் கொண்ட வேகப் பந்துவீச்சாளர் என்றாலும் அவர் அதிக போட்டிகளில் பேட்டிங் செய்ததில்லை. அவரை நம்பி ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஆட வைப்பது என்பது ஆபத்தான விஷயம்.
ஆனால் அதே சமயம், ஷர்துல் தாக்குர் இல்லாமல் நியூசிலாந்து போட்டியில் களமிறங்கிய இந்திய அணியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தனர். ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா, முகமது சிராஜ் என ஐந்து பந்துவீச்சாளர்களை வைத்து 50 ஓவர்களையும் வீசி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்தியா, குல்தீப் யாதவ் அந்தப் போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தாலும் வேறு பந்துவீச்சாளர் இல்லாததால் அவரையே மீண்டும், மீண்டும் பந்து வீச அழைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
இந்த சிக்கல் இங்கிலாந்து போட்டியில் வந்து விடக் கூடாது என்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஆறு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அதே சமயம், பேட்டிங்கிலும் ஏழு பேட்ஸ்மேன்கள் வேண்டும். அதனால், ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பும்ரா ஆகியோருடன் ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது.
ரோஹித், சுப்மன் கில், கோலி, ஸ்ரேயாஸ், ராகுல் ஆகியோருடன் ஜடேஜா, ஷர்துல் தாக்குர் கூடுதல் பேட்ஸ்மேன்களாக செயல்படுவர். அஸ்வின் பேட்டிங் செய்வார் என்றாலும் அவரை பெரிதாக நம்ப முடியாது. எனவே, முகமது ஷமியை இந்த அணிக்குள் நுழைப்பது கடினம். ஆல் - ரவுண்டர் ஷர்துல் தாக்குர் வேண்டும் என்பதால் ஷமி நீக்கப்படுவது சரியான முடிவாக இருக்காது என முன்னாள் வீரர்கள் பலர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.