கொல்கத்தா : 2023 உலகக்கோப்பை தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
முதல் இடத்துக்கும், இரண்டாம் இடத்துக்குமான வித்தியாசம் தற்போது 7 ரன்களே உள்ளன. இதற்கு முகமது சிராஜ் தென்னாப்பிரிக்கா போட்டியில் க்விண்டன் டி காக்கை 5 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தது தான் முக்கிய காரணம்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டிக்கு முன் இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் க்விண்டன் டி காக் 545 ரன்களுடன் முதல் இடத்தில் இருந்தார். விராட் கோலி 442 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்தார்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த போது விராட் கோலி 101 ரன்கள் குவித்து தன் 49வது ஒருநாள் போட்டி சதத்தை நிறைவு செய்தார். அதன் மூலம், 2023 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 543 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார்.
அப்போது க்விண்டன் டி காக்குக்கும், கோலிக்கும் இடையே வெறும் 2 ரன்கள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. டி காக் அடுத்து பேட்டிங் செய்ய இருந்ததால் எப்படியும் இன்னும் அதிக ரன்கள் அடித்து கோலி எட்ட முடியாத நிலைக்கு அவர் செல்ல வாய்ப்பு இருந்தது. அவரும் நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார்.
ஆனால், முகமது சிராஜ் வீசிய இன்னிங்க்ஸின் இரண்டாவது ஓவரில் டி காக் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பவுல்டு அவுட் ஆகி வெளியேறினார். அதனால், விராட் கோலிக்கும், டி காக்குக்கும் இடையே தற்போது 7 ரன்களே வித்தியாசம் உள்ளது.
விராட் கோலி 543 ரன்களும், க்விண்டன் டி காக் 550 ரன்களும் எடுத்து உள்ளனர். இரண்டு அணிகளுக்கும் இன்னும் ஒரு லீக் போட்டி மற்றும் அரை இறுதிப் போட்டி உறுதியாக உள்ளது. அந்த இரண்டு போட்டிகளின் முடிவிலேயே விராட் கோலி அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற வாய்ப்பு உள்ளது.
இதே பட்டியலில் மூன்றாவது இடத்தில் 523 ரன்களுடன் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா இருக்கிறார். அவருக்கும் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. நான்காவது இடத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இருக்கிறார். அவர் 442 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 7 போட்டிகளில் 428 ரன்கள் எடுத்து ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். அவருக்கு லீக் சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளதால் அவரும் முதல் இடத்தை பிடிக்க போட்டி போடலாம்.