தரம்சாலா : தென்னாப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ரியான் குக், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் போது செய்த சில சம்பவங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அவரைப் போல மற்ற அணிகளின் பயிற்சியாளர்களும் போட்டிகளின் போதும் துடிப்பாக செயல்பட வேண்டும் என கூறி வருகின்றனர்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்தது. 43 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது.
இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளின் பந்துவீச்சை சரமாரியாக அடித்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணியால் நெதர்லாந்து பந்துவீச்சை சமாளித்து ஆட முடியவில்லை. அந்த அளவுக்கு பந்துவீச்சும், பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது.
இந்தப் போட்டிக்கு முன் தென்னாப்பிரிக்கா அணி குறித்து அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து திட்டம் தீட்டி நெதர்லாந்து களமிறங்கி இருந்தது அப்போதே தெரிய வந்தது. அதன் பின் நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ரியான் குக் செய்த ஒரு விஷயம் அடுத்த கட்டத்துக்கு அந்த அணியை கொண்டு சென்றது என்றே சொல்லலாம்.
போட்டியின் இடையே தென்னாப்பிரிக்கா அணி விக்கெட்களை இழந்தாலும் டேவிட் மில்லர், கிளாசன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்த நிலையில், இடைவேளையின் போது நெதர்லாந்து பயிற்சியாளர் சின்ன காகிதத்தில் களத்தில் இருக்கும் பேட்ஸ்மேனை வீழ்த்த எப்படி பீல்டிங் நிறுத்த வேண்டும், என்ன மாதிரி பவுலிங் போட வேண்டும் என யோசனைகளை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தார்.
இரண்டு முறை அவர் அனுப்பிய செய்தியை படித்து செயல்படுத்திய நெதர்லாந்து அணி அந்த ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்தியது. இதைக் கண்ட ரசிகர்கள் ஒரு பயிற்சியாளர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்? என ரியான் குக்கை பாராட்டி வருகின்றனர். இதே போன்ற பயிற்சியாளர்கள் இந்திய அணி உட்பட ஒவ்வொரு அணியிலும் இருக்க வேண்டும் என சிலர் கூறினர்.