பெங்களூர் : 2023 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி நம்ப முடியாத காரியத்தை செய்தால் தான் இனி அரை இறுதிக்கு முன்னேற முடியும்.
நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதிய போட்டியில், இலங்கை நிர்ணயித்த 172 ரன்கள் இலக்கை, நியூசிலாந்து அணி 23.2 ஓவரில் எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணி கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆட உள்ள நிலையில் அந்தப் போட்டியில் நம்ப முடியாத அளவுக்கு வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும். அதற்கு காரணம், தற்போது 8 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள், நியூசிலாந்து அணியை விட மிகக் குறைந்த நெட் ரன் ரேட் வைத்துள்ளன.

அதனால், தங்கள் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட்டை முந்த வேண்டும். தற்போது நியூசிலாந்து அணி 0.743 நெட் ரன் ரேட் வைத்துள்ளது. பாகிஸ்தான் அணி 0.036 நெட் ரன் ரேட்டும், ஆப்கானிஸ்தான் அணி -0.338 நெட் ரன் ரேட்டும் வைத்துள்ளன.
அதனால், பாகிஸ்தான் அணி பெரிய வித்தியாசத்தில் வென்றால் தான் அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும். அந்த அணி தன் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதலில் பந்து வீசினால் 50 ஓவர்களில் ஆல் - அவுட் செய்து விட்டு, அடுத்து 2.3 ஓவரில் அந்த இலக்கை பாகிஸ்தான் எட்டினால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும். பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால் 278 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற வேண்டும். அப்போது தான் நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட்டை முந்த முடியும். இது தான் அந்த அணிக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.
இங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பை தொடரில் மோசமாக ஆடிய போதிலும் கடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் எட்டு இடங்களுக்குள் இடம் பெற்று சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இடம் பெற முயற்சி செய்யும். மேலும், பென் ஸ்டோக்ஸ் கடந்த போட்டியில் சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். எனவே, பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தினாலும், அரை இறுதி செல்வதெல்லாம் நடக்காத காரியம் என்றே கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணி இதை விட மோசமான நிலையில் உள்ளது. அந்த அணி மைனசில் நெட் ரன் ரேட் வைத்திருப்பதால் 438 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டும் நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட்டை தாண்ட முடியும். ஆப்கானிஸ்தான் அணி அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆடுவதால் இந்த அளவுக்கு வெற்றி பெறுவது நடக்காத காரியம் தான்.