சென்னை : பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி மாற்று வீரரை அணியில் பவுலிங் போட வைத்தது.
கிரிக்கெட் விதிப்படி இந்த சம்பவம் நடந்திருந்தாலும், பல ரசிகர்களுக்கு இப்படி ஒரு கிரிக்கெட் விதி இருப்பதே தெரியாததால் குழம்பிப் போனார்கள். என்ன நடந்தது?

பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 270 ரன்கள் குவித்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்ய வந்தது.
அப்போது தென்னாப்பிரிக்க அணியின் முதல் ஓவரின் மூன்றாவது பந்தை பீல்டிங் செய்த பகல் வீரர் ஷதாப் கான், ரன் அவுட் செய்யும் முயற்சியில் கீழே விழுந்தார். அவரது தோள்பட்டை மற்றும் தலை தரையில் மோதியது. அதனால், சிறிது நேரம் அசையாமல் தரையில் இருந்தார் ஷதாப் கான்.
உடனே பாகிஸ்தான் அணியினர் அவரை பரிசோதித்தனர். பாகிஸ்தான் அணியின் பிசியோதெரபிஸ்ட் அவருக்கு தலையில் அடி பட்டு இருப்பதை உறுதி செய்தார். அவரால் முதலில் நிதானத்திற்கே வர முடியாமல் போக, அவரை தூக்கிச் செல்ல ஸ்ட்ரெட்சர் எடுத்து வரப்பட்டது. எனினும், அவர் எழுந்து தடுமாறி நடந்து சென்றார். அவருக்கு தலையில் அடிபட்டதால் மூளை அழற்சி ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் மேட்ச் ரெப்ரீ ஒப்புதலுடன் அவர் போட்டியில் இருந்து பாதியில் நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக உசாமா மிர் அணியில் இணைந்தார். ஐசிசி விதிப்படி ஒருநாள் போட்டியின் இடையே தலையில் அடிபட்டு ஒரு வீரருக்கு மூளை அழற்சி ஏற்பட்டால் அந்த வீரரை நீக்கி விட்டு, அவருக்கு இணையான மாற்று வீரரை அணியில் ஆட வைக்கலாம். பேட்டிங், பவுலிங் என எப்போது வேண்டுமானாலும் இந்த மாற்றத்தை செய்யலாம்.
ஆனால், உலகக்கோப்பை வரலாற்றில் இந்த மாற்றம் நிகழ்வது இதுவே முதல் முறை. மாற்று வீரராக பாதி போட்டியில் இணைந்த உசாமா மிர் 8 ஓவர்களில் 45 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். எனினும், பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.