டெல்லி : ஆப்கானிஸ்தான் அணி, உலகக்கோப்பை லீக் சுற்றில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர வைத்துள்ளது.
இந்த நிலையில், 2023 உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் பெரிய அளவில் மாற்றம் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது ஆப்கானிஸ்தான் அணி. ஆஸ்திரேலியா அணி ஒன்பதாவது இடத்தில் இருந்தது.

தற்போது இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் ஆறாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. ஆஸ்திரேலியா கடைசி இடமான பத்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை ஆஸ்திரேலியா 2 போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்ததே இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக மோசமான நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலியா.
அந்த அணி உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா என இரண்டு அணிகளுடன் ஆடி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது. இலங்கை, நெதர்லாந்து அணிகளும் வெற்றி எதுவும் பெறாமல் இருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை விட முன்னே இருப்பதால் 8 மற்றும் 9வது இடத்தில் இருக்கின்றன. ஆஸ்திரேலியா மோசமான தோல்விகளை அடைந்து -1.846 நெட் ரன் ரேட் உடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி தான் ஆடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் -0.08 நெட் ரன் ரேட் உடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் -0.65 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து போட்டியின் முடிவில் புள்ளிப் பட்டியலின் முதல் இடத்தில் இந்தியாவும், இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணியும் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன.
மூன்றாம் இடத்தில் தென்னாப்பிரிக்கா தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் நெட் ரன் ரேட் +2.360 ஆகும். தற்போதைய நிலையில் அதிக நெட் ரன் ரேட் வைத்துள்ள அணி தென்னாப்பிரிக்கா தான்.
பாகிஸ்தான் அணி தான் ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் ஒரு வெற்றியுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது.