கொல்கத்தா : 2023 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தன் அரை இறுதி வாய்ப்பை இழந்தது. பாகிஸ்தான் அணிக்கு, ஆப்கானிஸ்தான் வெளியேற்றம் எந்த வகையிலும் உதவி செய்யப் போவதில்லை.
உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி தன் ஒன்பது போட்டிகளையும் ஆடி முடித்துள்ளது. அதன் முடிவில் ஒன்பதில், நான்கு வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் நான்கு இடங்களில் இந்தியா (16 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (14 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (12 புள்ளிகள்), நியூசிலாந்து (10 புள்ளிகள்) உள்ளன. இதில் ஆஸ்திரேலியா அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. அதில் தோல்வி அடைந்தாலும் ஆஸ்திரேலிய அணியின் அரை இறுதி வாய்ப்பு உறுதியாகி விட்டது.

இந்த நிலையில், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி தன் அனைத்து லீக் போட்டிகளிலும் அடி முடித்து விட்ட நிலையில், பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியை வீழ்த்த அரிதான ஒரு வாய்ப்பு உள்ளது.
இதுவரை அரை இறுதிக்கு போட்டியாக இருந்த மற்றொரு அணியான ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்தாலும், தன் அரை இறுதி வாய்ப்புக்காக பாகிஸ்தான் போராடித் தான் ஆக வேண்டும். பாகிஸ்தான் அணி தன் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோதி வெற்றி பெறுவதோடு நியூசிலாந்து அணியை விட கூடுதல் நெட் ரன் ரேட்டை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தற்போது நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட் 0.743 ஆக உள்ளது. பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் 0.036 ஆக உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியை 278 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் நியூசிலாந்து அணியை விட அதிக நெட் ரன் ரேட் பெற வாய்ப்பு உள்ளது.
ஆனால், இங்கிலாந்து அணியும் முதல் எட்டு இடங்களில் இடம் பெற்று சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு தகுதி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆடும் என்பதால், பாகிஸ்தான் அணி அத்தனை எளிதில் 278 ரன்கள் வித்தியாச வெற்றியை பெற்று விட முடியாது.