ரிட்டையர் ஆகிறவர் ஆடும் ஆட்டமா இது? சாதாரண செஞ்சுரி இல்லை.. வங்கதேச அணியின் கதையை முடித்த டி காக்
மும்பை : தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர் க்விண்டன் டி காக் தன் கடைசி உலகக்கோப்பை தொடரில் ரன் வேட்டை நடத்தி வருகிறார்.
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி 140 பந்துகளில் 174 ரன்கள் குவித்தார்.

வெற்றிக் கனவுடன் வந்த வங்கதேச அணி, இவரது அதிரடி ஆட்டத்தால் நிலைகுலைந்து போனது. கடைசி நேரத்தில் ஹென்ரிச் கிளாசன் அடித்த அடியால் இன்னும் மோசமான நிலைக்கு சென்றது வங்கதேசம்.
தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் இடையே உலகக்கோப்பை லீக் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஹென்ரிக்ஸ் 12 ரன்களிலும், டஸ்ஸன் 1 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் டி காக் போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டு தன் அனுபவ ஆட்டத்தை ஆடினார். இது அவரது 150வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
எய்டன் மார்கிரம் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து ஆட, டி காக் அதிரடியாக ரன் குவித்தார். மார்கிரம் 69 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளாசன், டி காக் ஆடுவதற்கு ஏற்ப ஆடினார். டி காக் சதம் கடந்து 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 15 ஃபோர், 7 சிக்ஸ் அடித்து இருந்தார்.
அவர் சென்ற பின் கிளாசன் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடத் துவங்கினார். அவர் 49 பந்துகளில் 90 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 8 சிக்ஸ் அடித்து மிரட்டினார். அடுத்து டேவிட் மில்லரும் ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர் 15 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 382 ரன்கள் குவித்தது. வங்கதேச அணிக்கு 383 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
வங்கதேச அணியின் ஹசன் மஹ்முத் 6 ஓவர்களில் 67 ரன்கள் கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். அனுபவம் வாய்ந்த ஷகிப் அல் ஹசன் 9 ஓவர்களில் 69 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.


Click it and Unblock the Notifications