சென்னை : 2023 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றிக்கு பின் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மைதானத்தை சுற்றி வந்து நன்றி கூறினர்.
அப்போது வர்ணனையாளர் பணியில் இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தன் வேலையைக் கூட மறந்துவிட்டு, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுடன் நடனம் ஆடினார்.
ரஷித் கான் - இர்பான் பதான் ஆடிய நடனம் சமூக ஊடகங்களில் பரவியது. பலரும் இர்பான் பதான், ரஷித் கானுடனான நட்பால் இப்படி நடனம் ஆடினார் என்று கூறினார்கள். சிலர் இர்பான் பதானுக்கு பாகிஸ்தான் அணியை பிடிக்காது என்பதால் அவர் இப்படி நடனம் ஆடி பாகிஸ்தான் தோல்வியை கொண்டாடினார் எனக் கூறினார்கள்.

ஆனால், இந்தக் காரணங்களை தாண்டி ஆப்கானிஸ்தானுடன், இர்பான் பதானுக்கு ஒரு ஆழமான பந்தம் உள்ளது. அதுதான் பதான் வம்சாவளி. இதை பஷ்துன் வம்சாவளி என்றும் கூறுவார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்டது தான் பதான் வம்சாவளி. அங்கிருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்திய பகுதிகளில் பதான் வம்சாவளியினர் குடியேறினார்கள்.
இர்பான் பதான் குடும்பத்தினருக்கு பதான் என்ற அடைமொழி வரவும் அவர்கள் பதான் வம்சாவளியினர் என்பது தான் காரணம். இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணியை முதன்முறையாக வீழ்த்தி உலகக்கோப்பையில் வரலாறு படைத்தது. அதைக் கொண்டாடும் வகையிலேயே இர்பான் பதான், ரஷித் கானுடன் நடனம் ஆடினார்.
இதில் மற்றொரு விஷயமும் உள்ளது. எப்படி இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் பகை நாடுகளாக அறியப்படுகிறதோ, அதே போல, காலம் காலமாக ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாடுகள் பகை நாடுகளாக அறியப்படுகின்றன. அதனால், ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இர்பான் பதான், பகை நாட்டை தன் பூர்வீக நாட்டை சேர்ந்த அணி வீழ்த்தியதை கொண்டாடியதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.