டெல்லி : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு காரணம் கேப்டன் ரோஹித் சர்மா போட்ட திட்டம் சரியாக வேலை செய்தது தான்.
ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக உலகக்கோப்பை போட்டியில் ஆடும் போது அதில் பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதே ரோஹித் சர்மாவின் திட்டம். அதற்காகவே அவர் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார். வெறும் வெற்றி என்பதை விட பெரிய வெற்றியை பெற வேண்டும் என அவர் கருதினார்.

அது ஒருவகையில் மன ரீதியாக மற்ற அணிகளுக்கு இந்தியா மீது பயத்தை கொடுக்கும். அத்துடன் அதிக நெட் ரன் ரேட்டையும் இந்தியா அடையலாம். அதை செயல்படுத்த திட்டமிட்டார் ரோஹித் சர்மா.
முதலில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் ஆடியது. அந்த அணியை குறைந்த ரன்களில் சுருக்கலாம் என நினைத்த இந்தியாவின் எண்ணம் ஈடேறவில்லை. டெல்லி மைதானம் ரன் குவிக்க எளிதாக இருந்தது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் வரை ஆடியது. ஆனால், கடைசி 10 ஓவர்களில் அதிக ரன் அடிக்க விடாமல் பும்ரா தொடர்ந்து விக்கெட் வேட்டையாடினார். கடைசி ஓவர்களில் மட்டுமே அவர் 3 விக்கெட்களை சாய்த்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 272 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி இந்த இலக்கை 35 - 40 ஓவர்களுக்குள் எடுத்தால் நெட் ரன் ரேட் அதிகமாக கிடைக்கும். அதை அடைய நினைத்த ரோஹித் சர்மா, அதிரடி ஆட்டம் ஆடி 84 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 47, கோலி 55*, ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் எடுக்க இந்தியா 35 ஓவர்களில் எல்லாம் இலக்கை அடைந்தது.
இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன் திட்டமிட்டபடி அதிக நெட் ரன் ரேட் பெற்றது. ரோஹித் திட்டம் வெற்றி பெற்றது. இந்திய அணி தற்போது 1.5 நெட் ரன் ரேட் உடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 1.958 நெட் ரன் ரேட் உடன் முதல் இடத்தில் உள்ளது. இந்த சிறிய இடைவெளியை மட்டும் இந்தியா எட்டி இருந்தால் முதல் இடமே பெற்று இருக்கலாம். ஆனாலும், முதல் இரண்டு போட்டிகளில் இத்தனை நெட் ரன் ரேட் பெற்றதே சிறப்பான விஷயம் தான்.