டெல்லி : 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பாதி போட்டிகள் முடிந்துள்ளன. இந்த நிலையில், இந்திய அணி வீரர் ஷிகர் தவான் எந்த அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்ற தன் கருத்தை கூறி இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற ஒன்பது அணிகளுடன் மோதும். அதன் முடிவில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இதில் ஒரே புள்ளிகளை ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் பெற்றால் அந்த அணிகளுக்கு மட்டும் நெட் ரன் ரேட் அடிப்படையில் தரவரிசை அளிக்கப்பட்டு முதல் நான்கு இடங்களுக்குள் வரும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
தற்போதைய நிலையில் புள்ளிப் பட்டியலில் ஐந்து போட்டிகளில் ஆடிய நிலையில் இந்தியா, நியூசிலாந்து, மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தியா 10 புள்ளிகளும், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா தலா 8 புள்ளிகளும் பெற்றுள்ளன.

அடுத்த மூன்று இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன. இந்த நிலையில், ஷிகர் தவான் அரை இறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னேறுவது உறுதி எனக் கூறி இருக்கிறார்.
நான்காவது இடத்துக்கு முன்னேறும் அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் எனவும் கூறி இருக்கிறார். மேலும், ஒருவேளை தற்போது முன்னிலையில் இருக்கும் இந்தியா, நியூசிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளில் ஒரு அணி லீக் சுற்றின் முடிவில் அரை இறுதிக்கு முன்னேறாமல் போனால் அது பெரிய அதிர்ச்சி சம்பவமாக இருக்கும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.
இந்தியா மட்டுமே ஐந்து போட்டிகளின் முடிவில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இருக்கும் ஒரே அணி. மற்ற அணிகள் அனைத்தும் ஒரு போட்டியிலாவது தோல்வி அடைந்துள்ளன. இந்தியா அரை இறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்தது என்றே சொல்லலாம். எனினும், தவான் சொல்வது போல ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளில் ஒரு அணி அரை இறுதி வாய்ப்பை இழக்கும்.