சுப்மன் கில் எங்கே? சென்னையை விட்டு கிளம்பிய பின்னும் மூடி மறைக்கும் பிசிசிஐ.. என்ன நடந்தது?
அஹமதாபாத் : இந்திய அணி வீரர் சுப்மன் கில் காய்ச்சல் காரணமாக சென்னையில் தங்கி மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.
தற்போது அவர் சென்னையை விட்டு கிளம்பி விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் நேராக அஹமதாபாத் சென்றுள்ளார். அங்கே தான் இந்திய அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது.

அப்படி என்றால் சுப்மன் கில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்க இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பிசிசிஐ இந்த விஷயத்தை இதுவரை மர்மமாக வைத்துள்ளது.
சுப்மன் கில் 2023 உலகக்கோப்பை அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு பின் நிச்சயமான இடத்தை பெற்ற அணியின் நிரந்தர வீரர். காரணம், இந்த ஆண்டு மற்ற இந்திய வீரர்களை விட அதிக ஒருநாள் போட்டி ரன்களை குவித்து இருக்கிறார் சுப்மன் கில்.
இந்த நிலையில், அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால், இந்திய அணியின் முதல் உலகக்கோப்பை போட்டியில் அவர் ஆடவில்லை. சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடாத அவர் டெங்கு காரணமாக தீவிர கண்காணிப்பில் இருந்தார்.
பின் இந்திய அணி ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆட டெல்லி சென்றது. ஆனால், அப்போது கில் அணியுடன் பயணிக்கவில்லை. அவர் உடல்நிலை இன்னும் தேற வேண்டும் எனக் கூறி மருத்துவர்கள் அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.
இரண்டு நாட்கள் ஆகி விட்ட நிலையில், தற்போது அவர் சற்று உடல்நலம் தேறியதால், அஹமதாபாத் சென்றுள்ளார். இந்தியா = பாகிஸ்தான் போட்டி நடக்க உள்ள நிலையில், இந்திய அணி டெல்லியில் இருந்து அங்கே வரும் போது, சுப்மன் கில் அணியுடன் இணைவார் என கூறப்படுகிறது.
ஆனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் சுப்மன் கில் ஆடுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சல் குணமானாலும், அவர் உடல் பலத்தை பெற சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். அதனால், அவர் குறைந்த பட்சம் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மட்டும் விலகி இருப்பார்.
அதன் பின்னரே அவர் போட்டியில் ஆடும் அளவுக்கு தயார் ஆவார் என பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது. அதே சமயம், சுப்மன் கில் ஓய்வில் தான் இருக்க வேண்டும், பாகிஸ்தான் போட்டியில் ஆடப் போவதில்லை என்றால் அவரை பாகிஸ்தான் போட்டிக்கு அடுத்து இந்தியா ஆட உள்ள வங்கதேச அணிக்கு எதிரான போட்டி நடைபெற உள்ள புனே நகரத்துக்கு அனுப்பி இருக்கலாமே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications