தோல்விக்கு பின் பெரிய சதிவேலை.. உண்மையை சொல்லப் போகிறேன்.. இலங்கை கிரிக்கெட் நிர்வாகி அதிரடி
கொழும்பு : இலங்கை கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்து வெளியேறி இருக்கும் நிலையில், அந்த தோல்விகளுக்கு பின் சதிவேலை இருப்பதாக கூறி அதிர வைத்து இருக்கிறார் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் பிரமோதயா விக்ரமசிங்கா.
2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்பே இலங்கை அணி ஆசிய கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால், இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 50 ரன்களில் ஆட்டமிழந்தது.
அடுத்து உலகக்கோப்பை தொடரிலும் 9 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று மோசமான நிலையில் இருக்கிறது. உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி இருந்தது இலங்கை அணி.

இதை அடுத்து இலங்கை நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் வெடித்தது. விமல் வீரவன்சா என்ற எம்பி, இந்தியா - இலங்கை ஆடிய போட்டியில் இலங்கை கேப்டன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததில் சதி இருக்கலாம், அணியின் ஆலோசகர் மகிளா ஜெயவர்தனேவை விசாரிக்க வேண்டும் என சந்தேகம் கிளப்பி இருந்தார்.
இதனிடையே, இலங்கை கிரிக்கெட் அமைப்பை கலைத்து உத்தரவிட்டது இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சகம். அந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. முக்கிய கிரிக்கெட் அமைப்பு நிர்வாகியை பதவியில் இருந்து அரசு நீக்கியதால், அரசு கிரிக்கெட் அமைப்பில் தலையிடுவதாக கூறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அந்த அமைப்பை தற்காலிகமாக உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி செய்துள்ளது. இந்த நீக்கம் தொடரும் வரை இலங்கை அணியால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாது என கூறப்படுகிறது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவரும், முன்னாள் இலங்கை அணி வீரருமான பிரமோதயா விக்கிரமசிங்காவிடம் கேட்ட போது, "எனக்கு இரண்டு நாட்கள் மட்டும் கொடுங்கள். எல்லாவற்றையும் நான் சொல்கிறேன். இதன் பின்னணியில் வெளியில் இருந்து சில சதி வேலைகள் நடந்துள்ளது." எனக் கூறினார். அவரது பதிலால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications