மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்று வரும் புதன்கிழமை முதல் தொடங்குகிறது. பத்து அணிகள் பங்கேற்று விளையாடும் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும்.
இதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நான்காவது அணி எது என்று தெரிந்துவிடும். அரையிறுதிக்கு செல்லப் போவது நியூசிலாந்தா அல்லது பாகிஸ்தானா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா நியூசிலாந்துடன் விளையாடினால் வரும் புதன்கிழமை மும்பையில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடும். இதுவே பாகிஸ்தானுடன் விளையாடுவதாக இருந்தால் வரும் வியாழக்கிழமை ஈடன் கார்டன் மைதானத்தில் மோதும். இந்த நிலையில் எந்த இடைவெளியும் இன்றி தொடர்ந்து அடுத்தடுத்து அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளதால் ரிசர்வ் டே வைக்கப்படவில்லை.
கடந்த முறை 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு வசதி இம்முறை செய்து தரப்படவில்லை. இதனால் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தனால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஐ சி சி ரிசர்வ் டே இல்லை என்பதால் புள்ளி பட்டியலில் எந்த அணி அதிக ரன் ரேட் பெற்று முன்னிலையில் இருக்கிறார்களோ அவர்கள் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று தெரிவித்துள்ளது.
உதாரணத்திற்கு முதலிடத்தில் உள்ள இந்தியாவும் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்தும் அரையிறுதியில் மோதி மழையால் ஆட்டம் ரத்தனால் அதிக புள்ளிகள் பெற்றுள்ள அடிப்படையில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு செல்லும். இதேபோன்று இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவும் மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவும் அரை இறுதி போட்டியில் மோதும் போது மழை குறுக்கிட்டால் போட்டி ரத்து செய்யும் பட்சத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா இறுதி சுற்றுக்கு செல்லும். இதனால் இன்றைய வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்துற்கு செல்ல முயற்சி செய்து வருகிறது.