டெல்லி : ஆஸ்திரேலிய அணியின் ஆல் -ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக 40 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகை மிரட்டினார்.
அவர் தன் அதிவேக உலகக்கோப்பை சதத்தை தன் மகன் லோகன் மாவெரிக்குக்கு சமர்ப்பணம் செய்தார். அவர் அதி வேக சதம் அடிக்க காரணமே தன் மகன் தன்னை காண நேரில் வந்தது தான். ஆனால், இந்தப் போட்டியில் இன்னொரு லோகனும் மேக்ஸ்வெல் சதத்துக்கு முக்கிய காரணமாக இருந்தார். யார் அந்த லோகன்?
ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் தான் மேக்ஸ்வெல் சதம் அடித்தார் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் சதம் அடித்து இருந்தார். அப்போது 4 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், 40வது ஓவரின் துவக்கத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினார் மேக்ஸ்வெல்.
40வது ஓவரை லோகன் வான் பீக் வீசினார். அந்த ஓவரில் சதம் அடித்த வார்னர் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் அந்த ஓவரில் ஒரு பந்தை கூட சந்திக்கவில்லை. அடுத்து 48வது ஓவரில் லோகன் வான் பீக் மீண்டும் பந்து வீச வந்தார். அந்த ஓவரில் மேக்ஸ்வெல் இரண்டு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். 21 ரன்கள் கிடைத்தது.

பின்னர் தொடர்ந்து தன் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் அடித்தார். ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் இதுதான். சதம் அடித்த கையோடு கைக்குழந்தையான தன் மகன் லோகன் மாவெரிக்குக்கு தன் அதிரடி சதத்தை சமர்ப்பணம் செய்தார் மேக்ஸ்வெல்.
நேற்று தான் தன் தந்தை ஆட்டத்தை காண இந்தியா வந்தார் லோகன் மாவெரிக். இந்த நிலையில், தன் மகன் வந்த நேரத்தில் உச்சகட்ட பார்முக்கு வந்த மேக்ஸ்வெல் உலகக்கோப்பை சாதனைகளை உடைத்து எறிந்தார். தன் மகன் லோகனுக்காக சதம் அடித்த தந்தை, மற்றொரு லோகன் வான் பீக் ஓவரில் அதிக ரன் சேர்த்தது சுவாரசியம் அளித்தது. அது மட்டுமின்றி லோகன் வான் பீக் வீசிய கடைசி ஓவரில் தன் விக்கெட்டையும் பறிகொடுத்தார் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல் - லோகன் இணை களத்திலும், வெளியிலும் தன் பந்தத்தை தொடர்ந்தது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்த நிலையில், நெதர்லாந்து அணி 90 ரன்கள் மட்டுமே எடுத்து 309 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய தோல்வியை பதிவு செய்தது. உலகக்கோப்பை வரலாற்றில் இதுவே மோசமான தோல்வி ஆகும்.