இலங்கை கேப்டன் அணியில் இருந்தே நீக்கம்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. என்ன நடந்தது?
ஹைதராபாத் : இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் தசுன் ஷனகா அணியில் இருந்தே நீக்கப்பட்டார். காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி உள்ளது. ஆனாலும், இதில் சில சந்தேகங்களும் உள்ளன.
அவருக்கு பதிலாக மாற்று வீரராக சமிகா கருணாரத்னே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேப்டன் தசுன் ஷனகாவிற்கு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது தொடையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் உலகக்கோப்பை தொடரை நடத்தும் ஐசிசி-யின் டெக்னிகல் கமிட்டி அனுமதியுடன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
எனினும், இது காயம் மட்டும் தானா? அல்லது கேப்டனாகவும், தனிப்பட்ட முறையில் அவர் ஃபார்மில் இல்லாததாலும் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தசுன் ஷனகா மிக மோசமாக இருந்த இலங்கை அணியை ஓரளவு பெயர் சொல்லும் அணியாக மாற்றி இருந்தார். ஆனாலும், பெரிய அணிகளை வீழ்த்தும் வலிமை அந்த அணியிடம் இல்லை.
கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறினாலும், இலங்கை அணி வெறும் 50 ரன்கள் எடுத்து ஆல் - அவுட்டாகி பெரும் ஏமாற்றம் அளித்தது. அதன் பின் உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும் முன் ஷனகா கேப்டன் பதவியில் இருந்து தானே விலகப் போவதாக செய்திகள் வெளியானது.
ஆனால், கடைசி நிமிடத்தில் ஷனகா தலைமையில் இலங்கை அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்தது. ஆனால், தற்போது இலங்கை அணி உலகக்கோப்பை தொடரில் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த நிலையில், ஷனகா காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
அவர் காயம் குணமாக மூன்று வாரங்கள் ஆகும் என்பதால் நீக்கப்பட்டதாக கூறி இருக்கிறது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம். இதில் தான் சந்தேகம் எழுந்துள்ளது. ஷனகா மீது உள்ள அதிருப்தியால் அவரை நீக்கி இருக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது,
தற்போது இலங்கை அணியின் கேப்டனாக குசால் மென்டிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நீண்ட காலமாக அணியின் துணை கேப்டனாக இருந்து வருகிறார். நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். அதன் காரணமாக அவரை கேப்டானாக்கி இருக்கிறார்கள்.
உலகக்கோப்பை தொடருக்கு முன் அறிவிக்கப்படும் 15 வீரர்களில் யாரை அணியில் இருந்து நீக்க முடியும்? காயம் அல்லது தனிப்பட்ட நியாயமான காரணங்களுக்காக மட்டுமே அவர்களை நீக்க முடியும். ஐசிசி டெக்னிகல் கமிட்டி அவரது நீக்கத்துக்கான காரணத்தை ஒப்புக் கொண்டு அனுமதி கொடுத்தால் மட்டுமே அவரை நீக்க முடியும். அந்த வகையில், ஷனகாவின் நீக்கத்தை எளிதில் கேள்வி கேட்க முடியாது. ஆனாலும், இதற்கு முன் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் இயல்பாகவே அவர் நீக்கம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications