சென்னை : வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் பந்து வீசிய பின் அம்பயர் நோ பால் என அறிவித்தார்.
அப்போது ரசிகர்களும், சில நியூசிலாந்து வீரர்களும் கூட பிலிப்ஸ் சரியாகத் தானே பந்து வீசினார். பின் எதற்காக அம்பயர் நோ பால் கொடுத்தார் என குழம்பினர். ஆனால், கிளென் பிலிப்ஸ் பந்து வீசும் போது ஒரு தவறு செய்தார்.

முதலில் இந்தப் போட்டியில் பகுதி நேர ஸ்பின்னர் ஆன கிளென் பிலிப்ஸ் 2 ஓவர்களை வீசினார். தான் வீசிய முதல் ஓவரிலேயே முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் ஒரு ஓவர் வீச வாய்ப்பு கொடுத்தார் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.
கிளென் பிலிப்ஸ் 15வது ஓவரின் முதல் பந்தை வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு வீசினார். அவரது கால் சரியாக கிரீஸில் இருந்தது. அதை விட்டு முன்னே கால் செல்லவில்லை. ஆனால், பந்தை வீசும் போது எதிர் முனை ஸ்டம்ப்பில் பிலிப்ஸின் இடது கால் பட்டு, பெயில்ஸ் கீழே விழுந்தது.
கிரிக்கெட் விதிப்படி இது நோ பால் என்பதால் அம்பயர் அதை அறிவித்தார். அடுத்த பந்துக்கு ஃப்ரீ ஹிட்டும் கொடுத்தார். விதிப்படி, பந்து வீச்சாளர் பந்தை வீசத் தொடங்கிய பின், பந்தை வீசும் முன், அந்த பந்துவீச்சாளர் ஏதோ ஒரு வகையில் எதிர்முனை ஸ்டம்ப்பை தகர்த்தால், எதிர் முனை பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு செல்லாத பட்சத்தில் அது நோ பால் ஆகும். இந்த விதிப்படி தான் இதை அம்பயர் நோ பால் என அறிவித்தார்.
கிளென் பிலிப்ஸ் பகுதி நேர பந்துவீச்சாளர் என்றாலும், இந்த உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு நம்பகமான பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் சாய்த்தார்.
அடுத்து நெதர்லாந்து போட்டியில் 2 ஓவர் வீசி 11 ரன்கள் மட்டும் கொடுத்தார். தற்போது வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அவர் 1 விக்கெட் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.