மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணி பல பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டியை எதிர்பார்த்து இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
எப்போதும் மிகப்பெரிய போட்டி ஒன்று வந்தால் மகிழ்ச்சி மட்டும்தான் நிறைந்திருக்கும். ஆனால் இன்று 130 கோடி இந்திய ரசிகர்களும் பயத்துடன் தான் தூங்க போகிறார்கள். காரணம் நாளை அவர்கள் எதிர்கொள்ளப் போவது பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியை தான்.

கடந்த முறை உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக அடைந்த தோல்வி இந்திய ரசிகர்கள் கனவில் இன்னும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு எல்லாம் பழி தீர்க்கும் விதமாக நாளைய அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கை வைக்கலாம். இந்த நிலையில் நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் ஒரு வீரர் கையில் தான் அது இருக்கிறது.
அது வேறு யாரும் அல்ல நமது விராட் கோலி தான். விராட் கோலி எப்போதுமே தன்னுடைய ரெக்கார்டை திருத்தி எழுதுவதில் வல்லவர். விராட் கோலி நெருக்கடியான ஆட்டத்தில் தான் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தருவார். ஆனால் உலகக்கோப்பை அரையிறுதியில் விராட் கோலி இதுவரை 10 ரன்களை கூட தாண்டவில்லை.
இதுவரை மூன்று அரை இறுதியில் விளையாடி ஒரு மோசமான ரெகார்டை வைத்திருக்கிறார். அந்த ரெக்கார்டை மாற்றும் வாய்ப்பு விராட் கோலிக்கு கிடைத்து இருக்கிறது. அந்த வகையில் விராட் கோலி இன்று சதம் அடித்தால் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அது 50-வது சதமாகும். இதன் மூலம் சச்சினின் ஒரு நாள் சதம் சாதனையை விராட் கோலி முந்தி விடுவார்.
இதேபோன்று விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 120 ரன்கள் சேர்த்தால் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தி விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு சென்று விடுவார். இதனால் ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் ஒரு தனிப்பட்ட ரெகார்ட் ஆகியவற்றை மாற்றி எழுதும் வாய்ப்பு விராட் கோலிக்கு கிடைத்திருக்கிறது. இதனை அவர் செய்வாரா என்பதை ரசிகர்கள் எதிர்கொண்டு காத்திருக்கிறார்கள்.