
இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்பு
ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இதில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்று ஆடி வருகின்றன. சர்வதேச அளவில் இந்த அணிகள் பங்கேற்கும் டெஸ்ட் தொடர்களின் வெற்றிகள் அடிப்படையில் அணிகள் இந்த தொடரில் புள்ளிகளை பெற்று ஆடிவருகின்றன. இதன் இறுதி போட்டி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.

ஐசிசி திட்டம்
இந்நிலையில் சர்வதேச டி20 சாம்பியன்ஷிப் கோப்பைக்கான தொடர்களை வரும் 2024 மற்றும் 2028 ஆகிய ஆண்டுகளில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் சர்வதேச அளவில் 10 நாடுகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு நாடும் இந்த தொடரின்கீழ் 48 போட்டிகளை விளையாடும் என்று ஐசிசி சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஐசிசியின் அடுத்த திட்டம்
இதேபோல சர்வதேச ஒருநாள் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான தொடர்களை வரும் 2025 மற்றும் 2029 ஆகிய ஆண்டுகளில் நடத்தவும் ஐசிசி திட்டமிட்டுள்ளது. வரும் 2026 மற்றும் 2030 ஆண்டுகளில் நடத்தப்படவுள்ள டி20 உலக கோப்பை மற்றும் 2027 மற்றும் 2031 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட உள்ள சர்வதேச ஒருநாள் போட்டி உலக கோப்பைகளுக்கு இணையாக மேற்கண்ட தொடர்களும் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விருப்பத்தை தெரிவிக்க காலக்கெடு
இந்நிலையில், ஐசிசியின் இந்த திட்ட அறிக்கை அதன்கீழ் உள்ள உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2023 முதல் 2031 வரையிலான ஐசிசியின் சர்வதேச அளவிலான இந்த தொடர்கள் குறித்த தங்களது விருப்பத்தை அந்த நாடுகள் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐசிசி முடிவு
ஐசிசியின் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இந்த தொடர்களை பெண்கள் கிரிக்கெட்டிலும் புகுத்த ஐசிசி திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த கிரிக்கெட் அனுபவங்களை பெற முடியும்.


Click it and Unblock the Notifications