மும்பை : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது பும்ராவுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கு விருது அளிக்கப்படவில்லை.
நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு சிறந்த வீரர் விருதை அளித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

அக்டோபர் மாதம் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை தொடரில் ஆடிய நிலையில், உலகக்கோப்பை போட்டிகளின் செயல்பாட்டை வைத்தே அந்த மாதத்திற்கான சிறந்த வீரர் விருது தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா அக்டோபர் மாதத்தில் ஆறு உலகக்கோப்பை லீக் போட்டிகளில் ஆடி 14 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவரது பவுலிங் எகானமி ஓவருக்கு 4 ரன்களுக்கும் கீழ் இருந்தது. அதாவது பும்ரா வெறும் விக்கெட் மட்டும் வீழ்த்தவில்லை. ரன் கொடுப்பதிலும் கட்டுக் கோப்பாக இருந்து ஒரு உலகத்தரமான பந்துவீச்சை பதிவு செய்து இருந்தார்.
அதே அக்டோபர் மாதத்தில் பும்ராவுக்கு நிகராக விக்கெட் மற்றும் எகானமியில் வேறு எந்த பந்துவீச்சாளரும் இல்லை என்பதால் மட்டுமே அற மட்டுமே பந்துவீச்சாளர்களில் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
மறுபுறம், பேட்டிங்கில் தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் மற்றும் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா பரிந்துரை செய்யப்பட்டனர். டி காக் ஆறு உலகக்கோப்பை போட்டிகளில் 3 சதம் அடித்து 431 ரன்கள் குவித்து இருந்தார். ரச்சின் ரவீந்திரா ஆறு போட்டிகளில் ஆடி 406 ரன்கள் குவித்து இருந்தார். ஆனால், அவர் நாட் அவுட் ஆக சில போட்டிகளில் இருந்ததால் அவரது சராசரி டி காக்கை விட அதிகமாக 81.20 ஆக இருந்தது.
இந்த மூன்று வீரர்களில் விக்கெட் மற்றும் எகானமி என இரண்டிலும் முன்னணியில் இருந்தார் பும்ரா. ஆனால், அவருக்கு சிறந்த வீரர் விருது வழங்கப்படவில்லை. ரச்சின் ரவீந்திரா அதிக பேட்டிங் சராசரி வைத்திருந்த நிலையில் அவருக்கு சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ரச்சின் சிறந்த வீரர் தான் என்றாலும் பும்ராவுக்கு விருது வழங்கப்படாமல் போனது தவறு என சிலர் இணையத்தில் வாதம் செய்து வருகின்றனர். பந்துவீச்சாளர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். வேறு சிலர் இளம் வீரராக இருந்து ரச்சின் உலகக்கோப்பையில் ரன் குவித்தது சாதாரண விஷயம் இல்லை எனவே அவருக்கு விருது கொடுத்தது தான் சரி எனக் கூறி வருகின்றனர்.