டி20 ரேங்கிங்.. குல்தீப், தவான் அதிரடி முன்னேற்றம்.. பின்னாடி இருக்கும் கோலி.. என்ன காரணம்?
Recommended Video

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டி20 போட்டிக்கான புதிய தரவரிசையை வெளியிட்டுள்ளது.
டி20 தரவரிசையில் அணிகளைப் பொறுத்தவரை பெரிய மாற்றம் ஏதுமில்லை. இந்தியா தன் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருக்கிறது.
தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டி20 போட்டிகளை அடுத்து இதில் இந்திய வீரர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

குல்தீப் சூப்பர் முன்னேற்றம்
இந்திய அணியில் குல்தீப் யாதவ் சரசரவென பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முன்னேறியுள்ளார். 20 இடங்கள் முன்னேறிய குல்தீப் யாதவ் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் சாம்பா இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசினார். அவர் 17 இடங்கள் முன்னேறி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார்.

மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள்
இந்திய அணியில் சாஹல் டி20 தொடரில் களம் இறங்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் 7 இடங்கள் சறுக்கி 11வது இடத்தை பிடித்துள்ளார். வேகப் பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா 20 மற்றும் 21வது இடத்தையே பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் டி20 தொடரில் தங்கள் முத்திரையை பதிக்கத் தவறினர்.

தவான் அதிரடி முன்னேற்றம்
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்களில் தவான் 5 இடங்கள் முன்னேறி தன் சிறந்த இடமான 11வது இடத்தை பிடித்துள்ளார். தவான் இந்த தொடரில் அதிரடியாக ஆடி 76 மற்றும் 41 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தொடரில் சரியாக ஆடாவிட்டாலும் முந்தைய செயல்பாடுகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் ராகுல் 6வது இடத்திலும், ரோஹித் சர்மா 9வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

பின்னால் இருக்கும் கோலி
விராட் கோலி 14வது இடத்தில் இருக்கிறார். இந்த தொடரில் சிறப்பாக ஆடினாலும், அவர் கடந்த 2 ஆண்டுகளில் பல டி20 தொடர்களில் பங்கேற்கவில்லை. அதனால், தரவரிசையில் பின்தங்கி உள்ளார். எனினும், தற்போது டி20 போட்டிகளில் கோலி மிக அதிக சாராசரி (48) வைத்துள்ளார்.

ஒரு ஆல்-ரவுண்டர் கூட இல்லை
ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களில் இந்திய வீரர் ஒருவர் கூட இல்லை என்பது பெரும் பின்னடைவாகும். ஹர்திக் பண்டியா காயத்தில் இருக்கும் நிலையில், இந்திய டி20 அணியில் ஒரு ஆல்-ரவுண்டர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இடங்களில் இந்தியா இல்லை
டி20 தரவரிசையில் முதல் இடங்களை பொறுத்தவரை இந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை. ஆல்-ரவுண்டர் பட்டியலில் மாக்ஸ்வெல் முதல் இடத்தில் இருக்கிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பாபர் ஆசாம் மற்றும் ரஷித் கான் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications