டி20 ரேங்கிங்... இந்தியா முதலிடம்.. அய்யோ பாவம் ஆஸி... ஆப்கனுக்கு அடுத்த இடத்திற்குத் தள்ளப்பட்டது!
துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றதன் மூலம் ஐசிசி டி20 தரவரிசையில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்ததுள்ளது இந்தியா. முன்னதாக இந்திய அணி 8ஆவது இடத்தில் இருந்தது. தற்போது, ஆஸ்திரேலியா, 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்த நாட்டுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மொத்தமாக வென்று அசத்தியுள்ளது இந்தியா. இதனால் ஐசிசி ரேங்கிலும், இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

மாற்றம், முன்னேற்றம்
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, தர வரிசையில் இந்தியா 8வது இடத்தில் இருந்தது. ஆனால், 3-0 என்ற கணக்கில் அந்த அணியை ஒயிட்வாஷ் செய்ததால் மளமளவென முன்னேறி, இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

இழுத்து வீசிபுட்டாங்களே
இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன்பாக, 2வது இடத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்த ஆஸ்திரேலியாவோ, தர தரவென இழுத்துச் செல்லப்பட்டு, 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

டேஞ்சரஸ் வெஸ்ட் இண்டீஸ்
இந்திய அணி 120 புள்ளிகளுடன், முதலிடத்தில் ராஜ கம்பீரமாக அமர்ந்துள்ளது. கெயில் உள்ளிட்டோர் அடங்கிய அபாயகர அணியான, வெஸ்ட் இண்டீஸ் 118 புள்ளிகளோடு 2வது இடத்திலுள்ளது.

இலங்கை 3வது இடம்
ஐசிசி தரவரிசையில் 3வது இடம் நமது பக்கத்து நாடான இலங்கைக்கு. வெஸ்ட் இண்டீஸ் போலவே 118 புள்ளிகளோடு உள்ளது. இம்மாதம், இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டித்தொடர், இம்மாதம் 9ம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது நினைவுகூறத்தக்கது.

இங்கி, நியூசி, தெ.ஆ
மேலும், இங்கிலாந்து 117 புள்ளிகளோடும், நியூசிலாந்து 116 புள்ளிகளோடும், தென் ஆப்பிரிக்கா 115 புள்ளிகளோடும், ஒவ்வொரு புள்ளிகள் வித்தியாசத்தில், முறையே, 4வது முதல் 6வது வரையிலான இடங்களை பகிர்ந்து கொண்டுள்ளன.

சோகம் என்னன்னா..
பரம வைரி பாகிஸ்தான், 113 புள்ளிகளோடு, இப்பட்டியலில் 7வது இடத்திலும், இந்தியாவிடம் பட்ட அடியால், 110 புள்ளிகளோடு, ஆஸ்திரேலியா 8வது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பெரும் சோகம் என்னவெனில், 9வது இடத்தில் அதாவது, ஆஸி.க்கு அடுத்த இடத்தில் குட்டி அணி ஆப்கானிஸ்தான் 80 புள்ளிகளோடு இடம்பெற்றுள்து.

வங்கதேசம் பின்னாடி
66 புள்ளிகளோடு பத்தாவது இடத்தில் ஸ்காட்லாந்தும், திறமையான அணியாக கருதப்பட்ட வங்கதேசம், 64 புள்ளிகள் மட்டுமே எடுத்து 11வது இடத்திலும், 61 புள்ளிகளோடு நெதர்லாந்து 13வது இடத்திலும், 54 புள்ளிகளோடு ஜிம்பாப்வே 14வது இடத்திலும் உள்ளன. அயர்லாந்துக்கு 15வது இடம்.


Click it and Unblock the Notifications