ஒருநாள் கிரிக்கெட்டை 40 ஓவர்களாக குறைக்க முடிவு.. சாம்பியன்ஸ் லீக் தொடர்.. ஐசிசி ஆலோசனை
மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வரும் ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டிகளின் கால அட்டவணையில் சில அதிரடி மாற்றங்களைச் செய்ய பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் ஓவர்களைக் குறைப்பது, முந்தைய சாம்பியன்ஸ் லீக் டி20 போன்ற உலகளாவிய புதிய டி20 பிரான்சைஸ் போட்டியை அறிமுகப்படுத்துவது, ஆசிய கோப்பை போன்ற தொடர்களை நடத்துவது மற்றும் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் குறிப்பிட்ட கால அவகாசத்தை உருவாக்குவது ஆகியவை இதில் அடங்கும்.
எடின்பர்க்கில் புதன்கிழமை நடைபெறும் ஐசிசியின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், அதன் 12 முழு உறுப்பினர்களும் இந்த மாற்றங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். கிரிக்கெட் விளையாட்டை ஆய்வு செய்ய ஐசிசியால் நியமிக்கப்பட்ட அமெரிக்க ஆலோசனைக் நிறுவனமான மெக்கின்சி (McKinsey) மேற்கொள்ளும் Strategic Review-யின் ஒரு பகுதியாக இது முன்மொழியப்பட்டுள்ளது.

மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் முயற்சியாக, ஐசிசி இத்தகைய தனித்துவமான திட்டங்களை ஊக்குவித்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது.கிரிக்கெட் உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக இருந்தாலும், உலக அளவில் முழுமையாகப் பரவுவதில் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. சிறிய நாடுகளில் கிரிக்கெட்டின் வளர்ச்சி கணிசமாக இருந்தாலும், அவர்களின் திறன் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
அதே நேரத்தில், டி20 போட்டிகளின் அபரிமிதமான வளர்ச்சியால் பாரம்பரிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. இருதரப்பு 50 ஓவர் போட்டிகளில் பார்வையாளர்களின் ஆர்வம் குறைந்து வருவதால், டி20 போட்டியின் வளர்ச்சியால் முதலில் பாதிக்கப்படப் போவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியாகத்தான் இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் கருதுகின்றனர்.
"கிரிக்கெட் விளையாட்டு உலகளவில் பரவி, ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றாக மாற வேண்டுமானால், போட்டியின் நேரம் குறையக் குறைய, அதன் வாய்ப்புகள் அதிகரிக்கும். அதன் மூலமே இந்த விளையாட்டு இன்னும் பெரியதாக மாறும். டி20 போட்டிகள் எப்போதும் நிலைத்து நிற்கும், ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை," என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த அறிக்கையின்படி, ஐசிசி விரைவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை 50 ஓவர் உலகக் கோப்பை தொடங்குவதற்கு முந்தைய 18 மாதங்களுக்கு மட்டும் நடத்த கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரை 2027 முதல் 2029 வரையிலான சீசனில் 12 அணிகளாக விரிவுபடுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதில் அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இந்த அனைத்து மாற்றங்களும் 2031 வரை நீடிக்கும் தற்போதைய ஐசிசி சைக்கிளுக்கு பிறகே முழுமையாக அமலுக்கு வரத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications

