கிரிக்கெட்டோட அடுத்த கட்ட நடவடிக்கைகள்... ஐசிசி தலைமை நிர்வாகிகள் நாளை மறுதினம் கூட்டம்
டெல்லி : கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. பல கோடி ரூபாய் நஷ்டத்தை பல கிரிக்கெட் போர்டுகளும் சந்தித்துள்ளன.
Recommended Video
இந்நிலையில், ஐசிசி உறுப்பு நாடுகளின் தலைமை நிர்வாகிகள் கூட்டம் நாளை மறுதினம் வீடியோ கால் மூலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிசிசிஐ சார்பில் செயலாளர் ஜெய் ஷா பங்கேற்கவுள்ளதாகவும், ஐபிஎல் குறித்து இந்தக் கூட்டத்தில் அவர் பேசி ஆலோசனை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தான விளையாட்டு போட்டிகள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள், தொடர்கள் ஆகியவை ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செய்வதறியாது ஐசிசியும் தவித்து வருகிறது. இந்தியாவிலும் ஐபிஎல் தொடரை பிசிசிஐ காலவரையன்றி ஒத்திவைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்த சீசனில் விளையாட வேண்டிய பல்வேறு தொடர்கள் ரத்தாகியுள்ளதால் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி டாம் ஹாரிசன் கவலை தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியான சூழலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தன்னுடைய பல ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

12 உறுப்பு நாடுகள் பங்கேற்பு
இந்நிலையில், கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் வகையிலும், ரத்தாகியுள்ள போட்டிகளின் நிலை குறித்து விவாதிக்கும் வகையிலும் ஐசிசியின் 12 உறுப்பு நாடுகள் 3 பிரதிநிதி நாடுகளின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நாளை மறுதினம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறவுள்ளது.

பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை
இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ சார்பில் அதன் செயலாளர் ஜெய் ஷா பங்கேற்கவுள்ள நிலையில், கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக ஐசிசியின் தலைமை நிர்வாகி மனு சானே தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் கிரிக்கெட் தொடர்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications