மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை தொடங்க ஒரு மாதமே உள்ள நிலையில், இந்தியாவில் வங்கதேச அணி விளையாடுவதில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. 'பாதுகாப்பு அச்சுறுத்தல்' காரணம் காட்டி, இந்தியாவுக்குப் பதிலாக இலங்கைக்கு தங்கள் போட்டிகளை மாற்றும்படி பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சியிடம் கோரியுள்ளது.
பங்களாதேஷ் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை பி.சி.சி.ஐ அறிவுறுத்தி ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விடுவித்ததே பிரச்சினைக்கு ஆரம்ப காரணமாகும். பங்களாதேஷ் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய பங்களாதேஷ் அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிஃப் நஜ்ருல்,"நாம் இந்தியாவை பற்றி பேசுகிறோம்,

கொல்கத்தாவைப் பற்றி அல்ல. போட்டிகள் இந்தியாவுக்குப் பதிலாக இலங்கைக்கு மாற்றப்பட்டால், எந்தப் பிரச்சினையும் இல்லை. பாகிஸ்தான் எங்கள் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்ததாக ஒரு செய்தியைப் பார்த்தேன். அது உண்மையோ இல்லையோ, பாகிஸ்தான் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) எங்கள் போட்டிகளை நடத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று அவர் கூறினார்.
மேலும், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி பாதுகாப்பு குழுவிடமிருந்து கடிதம் வந்துள்ளதாக நஜ்ருல் குறிப்பிட்டார். "ஐ.சி.சிக்கு அனுப்பிய இரண்டு கடிதங்களுக்கு இன்னும் பதில் இல்லை. ஆனால், ஐ.சி.சி பாதுகாப்பு குழு பி.சி.பிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில், "முஸ்தஃபிசுர் ரஹ்மான் பங்களாதேஷ் அணியில் சேர்க்கப்பட்டால் பங்களாதேஷ் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஐ.சி.சி பாதுகாப்பு குழுவின் இந்த அறிக்கை, இந்தியாவில் டி20 உலகக் கோப்பையில் தாங்கள் விளையாட முடியாத நிலையை உறுதிப்படுத்துகிறது," என்று நஜ்ருல் கூறினார்.
ஆனால், ஐ.சி.சி நஜ்ருலின் இந்த பேட்டியை திட்டவட்டமாக நிராகரித்தது. இது தொடர்பாக பேசிய ஐ.சி.சி, "சர்வதேச அங்கீகாரமுள்ள பாதுகாப்பு நிபுணர்களால் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில், பங்களாதேஷ் அணிக்கு எவ்வித பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், இந்தியாவில் விளையாடுவது குறித்து வங்கதேச வாரியம் முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளது. முன்னதாக வங்கதேசம் விளையாடும் போட்டிகளை சென்னையில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.