ஊக்க மருந்து பயன்படுத்திய தரங்காவுக்கு 3 மாதம் தடை
துபாய்: ஊக்க மருந்து பயன்படுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்காவுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் 3 மாதம் தடை விதித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்கா ஊக்கமருந்து பயன்படுத்தியது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கொழும்பில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின்போது அவர் இதை பயன்படுத்தினர். அவரது சிறுநீரை பரிசோதித்தபோது அதில் prednisone, prednisolone ஆகிய ஊக்க மருந்துகளின் படிவுகள் இருந்தன.
இது குறித்து இலங்கை அரசு கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந் நிலையில் தரங்கா, ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், கிரிக்கெட் மற்றும் அது சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் 3 மாதங்களுக்கு அவர் தாற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
ஊக்க மருந்து பயன்படுத்திய இலங்கை தொடக்க வீரர் உபுல் தரங்காவுக்கு கிரிக்கெட் விளையாட சர்வதேச கிரிக்கெட் வாரியம் 3 மாதம் தடை விதித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க பிரிட்டன் தமிழர் பேரவை அழைப்பு:
இந் நிலையில் இலங்கைக்கும் இங்கிலாந்திற்கும் இடையே ஜூன் 25ம் தேதி பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் நடைபெற உள்ள 20-20 கிரிக்கெட் போட்டியை உலகத் தமிழர்கள் புறக்க வேண்டும் என்று பிரிட்டன் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விளையாட்டின் போது, பிரித்தானிய தமிழர் இளையோர் அமைப்பின் சார்பில் 'இலங்கைக்கு கிரிக்கெட் புறக்கணிப்பு" போராட்டத்தில் ஈடுபட உள்ளது.
சேனல் 4 தொலைக்காட்சியில் 'இலங்கையின் கொலைக்களங்கள்" எனும் மிகக் கொடூரமான ஆவணப்படம் வெளியாகி அனைத்து இன மக்களும் இலங்கை அரசின் இன அழிப்பினை அறிந்திருக்கும் இந்த வேளையில், இந்தப் போட்டியில், போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அரசாங்கமான மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சனத் ஜெயசூரியாவும் விளையாட இருப்பதால், அன்றைய போராட்டம் முக்கியம் பெறுகிறது.
தென்னாபிரிக்காவின் முன்னைய நிறவெறி அரசாங்கத்திற்கெதிரான ஒரு நடவடிக்கையாக, அந்நாட்டின் கிரிக்கெட் மற்றும் ரக்பி அணிகளுக்கு சர்வதேசரீதியில் 1970 மற்றும் 1980களில் தடை விதிக்கப்பட்டதுடன், அந்நாடு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
அதே போல், ஜிம்பாவே அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கெதிரான ஒரு நடவடிக்கையாக, அந்நாட்டின் கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் செய்வற்கெதிரான ஒரு தடையை 2008ம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் விதித்திருந்தது.
இலங்கை அரசாங்கம் அதன் மீதான போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியிலான சுயாதீனமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படும் வரை சர்வதேச ரீதியிலான சகல விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கை பங்கு பெறுவதை தடை விதிப்பதற்கு, அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை தமிழ் மக்கள் சர்வதேச அளவில் இனிவரும் காலங்களில் தீவிரப்படுத்த வேண்டும்.
இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB), சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC), சர்வதேச விளையாட்டு வீரர்கள், உள்ளுர் விளையாட்டுக் கழகங்கள், ஊடகங்கள், கிரிக்கெட் கவுன்டிஸ் (Cricket county), உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் ஆகியோரிற்கு இலங்கையின் இன அழிப்பு தொடர்பாகவும், தாய்நாட்டில் தமிழர்களின் இன்றைய அவல நிலை தொடர்பாகவும் கடிதங்கள் எழுதி, ஆவணங்களை அனுப்பி அவர்கள் மூலமாக சர்வதேச விளையாட்டு அரங்குகளில் இருந்து சிறிலங்காவை தடைசெய்ய உதவுமாறு பிரிட்டன் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications