ஐசிசி டி20 தரவரிசை.. சூர்யகுமார் யாதவ் கிடுகடுவென உயர்வு.. ஹர்திக், சிவம் துபே முன்னேற்றம்
மும்பை: சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசையில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். இலங்கை அணியுடனான ஒருநாள் தொடர் வெற்றிக்குப் பிறகு, இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், ஹாரி ப்ரூக், அடில் ரஷித் ஆகியோரும் ஒருநாள் தரவரிசையில் உயர்வு பெற்றுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20ஐ போட்டிகளில் முறையே 82* மற்றும் 57* ரன்கள் குவித்து அசத்திய சூர்யகுமார், ஐந்து இடங்கள் முன்னேறி ஐசிசி டி20ஐ பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதற்கிடையில், ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா ஒரு இடம் உயர்ந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்கு ஆட்டங்களில் 142 ரன்கள் எடுத்த அவர், நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஆட்டங்களில் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.
அதேபோல், சக ஆல்ரவுண்டர் ஷிவம் தூபேவும் ஆறு இடங்கள் முன்னேறி 11வது இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்து தொடரில் இதுவரை மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, இரண்டாவது ஆட்டத்தில் 18 பந்துகளில் 36* ரன்களையும் விளாசி உள்ளார்.
அபிஷேக் ஷர்மா, பேட்டிங் தரவரிசையில் தனது முதலிடத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 35 பந்துகளில் 84 ரன்களும், 20 பந்துகளில் 68* ரன்களும் (இடையில் ஒரு டக் அவுட்டும் உண்டு) விளாசினார். அவர் 929 ரேட்டிங் புள்ளிகளுடன், இரண்டாவது இடத்தில் உள்ள பில் சால்ட்டை விட 80 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட நியூசிலாந்து தொடரைத் தவறவிடும் திலக் வர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களில், ஜஸ்பிரித் பும்ரா மூன்றாவது டி20 போட்டியில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்தச் சிறப்பான ஆட்டத்தால் அவர் நான்கு இடங்கள் முன்னேறி 13வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒருநாள் தரவரிசையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் மூன்று வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் அடித்த சதங்கள் அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
இதன் விளைவாக, ரூட் ஆறு இடங்கள் முன்னேறி 17வது இடத்தையும், ப்ரூக் 28வது இடத்தில் இருந்து 11வது இடத்தையும் பிடித்துள்ளனர். ரூட் இந்தத் தொடரை அதிக ரன்கள் (247) குவித்த வீரராக முடிக்க, ப்ரூக் (184) இரண்டாவது இடத்தில் முடித்தார்.தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய (7 விக்கெட்டுகள், சராசரி 19.85) அடில் ரஷித், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆறு இடங்கள் முன்னேறி 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications