டி20 கிரிக்கெட்டில் புதிய கிங்.. கோலி, சூர்யகுமார் வரிசையில் இணைந்த இளம் புயல் அபிஷேக் சர்மா,,
மும்பை: இந்திய கிரிக்கெட்டில்ன் இளம் அதிரடி வீரரான அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்குப் பிறகு ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டைப் பின்னுக்குத் தள்ளி, 24 வயதான அபிஷேக் சர்மா இந்த உச்சத்தை எட்டியுள்ளார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் டிராவிஸ் ஹெட் பங்கேற்காதது, அபிஷேக் சர்மா முதல் இடத்தை பிடிக்க ஒரு காரணமாக அமைந்தது.

கடந்த ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் தனது முதல் சதத்தை விளாசி சர்வதேச அரங்கில் அடியெடுத்து வைத்த அபிஷேக், அன்று முதல் தனது சீரான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இந்தியாவின் திலக் வர்மா டி20 பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் நீடிக்க, கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆறாவது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியர்களின் ஆதிக்கம்
டி20-யில் மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய வீரர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில், காயத்துடன் போராடிய ரிஷப் பண்ட், வலியையும் பொருட்படுத்தாமல் அடித்த அரைசதத்தின் மூலம் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது அபாரமான சதத்தின் மூலம் பேட்டிங் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 29-வது இடத்தைப் பிடித்து, தனது கிரிக்கெட் வாழ்வின் சிறந்த டெஸ்ட் பேட்டிங் தரவரிசையை எட்டியுள்ளார். மேலும், ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில் தனது முதலிடத்தை 422 புள்ளிகளுடன் மேலும் வலுப்படுத்தியுள்ளார். டெஸ்ட் பந்துவீச்சில், ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் அசைக்க முடியாதவராக முதல் இடத்தில் நீடிக்கிறார்.
அதே சமயம், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சுப்மன் கில் 9-வது இடத்தில் நீடிக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூன்று இடங்கள் சரிந்து 8-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
சாதனை படைத்த ஜோ ரூட்
இங்கிலாந்து வீரர்களைப் பொறுத்தவரை, ஜோ ரூட் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தனது முதலிடத்தை தக்க வைத்து இருப்பதோடு புள்ளிகளை அதிகப்படுத்தி உள்ளார். மான்செஸ்டர் டெஸ்டில் ஜோ ரூட் 150 ரன்கள் அடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு சென்றார். பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் மற்றும் ஆல்-ரவுண்டர் தரவரிசைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். பென் டக்கெட் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications