ஐசிசி டி20 தரவரிசை - ஒரே இன்னிங்சில் எகிறிய ருதுராஜ்.. கிடுகிடுவென உயர்வு
மும்பை : ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்து நிலையில் இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் டி20 போட்டியில் சொதப்பிய ருதுராஜ் இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 47 பந்துகளை எதிர்கொண்ட அவர் 78 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தால் தற்போது அவர் டி20 தரவரிசை பட்டியலில் 13 இடங்கள் முன்னேறி முதல் முறையாக ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறார். ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற வீரர்கள் தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவர்களுடைய இடத்தை இளம் வீரர்கள் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று இந்திய அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங் தரவரிசை பட்டியலில் முன்னேறி இருக்கிறார். இரண்டாவது டி20 போட்டியில் 22 பந்துகளை எதிர் கொண்டு ரிங்கு சிங் 48 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் நான்கு இடங்கள் முன்னேறி 39 வது இடத்தை பிடித்திருக்கிறார். இதேபோன்று அறிமுகப் போட்டியில் டக் அவுட்டாகி அடுத்த ஆட்டத்திலே 47 பந்துகளில் சதம் விளாசிய அபிஷேக் ஷர்மா தற்போது முதல் முறையாக தரவரிசை பட்டியலில் நுழைந்திருக்கிறார்.
இவர் தற்போது 75வது இடத்தை பிடித்திருக்கிறார்.இந்த சூழலில் ஆல் ரண்டர் அக்சர் பட்டேல் இரண்டு இடங்கள் பின் தங்கி தற்போது ஒன்பதாவது இடத்தை பவுலர்களுக்கான பட்டியலில் இருக்கிறார்.டி20 உலக கோப்பை நம்பிக்கை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற பும்ரா பதினோராவது இடத்திலிருந்து 14-வது இடத்திற்கு சரிந்து இருக்கிறார்.
இதேபோன்று ரவி பிஸ்னாய் ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் மொத்தமாக ஆறு விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் எட்டு இடங்கள் முன்னேறி தற்போது பௌலர்களுக்கான பட்டியலில் 14வது இடத்தில் இருக்கின்றார்.ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் அதிரடி நாயகன் ஹர்திக் பாண்டியா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதனால் இலங்கை வீரர் ஹசரங்கா முதலிடத்திற்கு பிடித்திருக்கிறார். இதே போன்று ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் அக்சர்பட்டேல் பன்னிரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications