ICC T20 Rankings : 25 இடங்கள் முன்னேறிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி.. திலக் வர்மா, அபிஷேக் அபாரம்
மும்பை : சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எந்த ஒரு தமிழக வீரரும் கொடுக்க முடியாத கம்பேக்கை வருண் சக்கரவர்த்தி கொடுத்திருக்கிறார். இந்திய டி20 அணியில் 2021 ஆம் ஆண்டு அறிமுகமாகி டி20 உலக கோப்பை அணி வரை இடம்பிடித்த வருண் சக்கரவர்த்தி திடீரென்று அணியிலிருந்து நீக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தி, கடந்த ஆண்டு இந்திய அணிக்குள் வந்தார். இந்த சூழலில் தமக்கு கிடைத்த இந்த இரண்டாவது வாய்ப்பை தனது 33 வது வயதில் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட வருண் சக்கரவர்த்தி விக்கெட் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

தென்னாப்பிரிக்க மண்ணில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்த வருண் சக்கரவர்த்தி, நேற்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். எனினும் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும், வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.
இந்த சூழலில் ஐசிசி டி20 போட்டிகள் அதற்கான தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டிருக்கிறது. இதில் தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தற்போது 25 இடங்கள் முன்னேறி தற்போது டாப் 5 இடத்திற்குள் நுழைந்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இதில் முதலிடத்தில் இங்கிலாந்து வீரர் ஆதில் ரசித் தொடர்ந்து நீடிக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் இடம்பெறாத ஆர்ஸ்தீப் சிங் எட்டாவது இடத்தில் உள்ளார். இதேபோன்று மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான ரவி பிஷ்னாய், ஐந்தாவது இடத்தில் இருந்து தற்போது பத்தாவது இடத்திற்கு சரிந்து இருக்கிறார்.
இதேபோன்று இந்திய அணியின் துணை கேப்டன் அக்சர் 11-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் ஆக தற்போது உருவெடுத்திற்கும் திலக் வர்மா சர்வதேச t20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான தற்போது நடைபெற்று இருக்கும் டி20 தொடரில் மொத்தமாக திலக் வர்மா 109 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சென்னையில் தனி ஆளாக நின்று 72 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் காரணமாக திலக் வர்மா, தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்த சூரியகுமார் தற்போது நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளார்.
டி20 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத ஜெய்ஸ்வால் ஒன்பதாவது இடத்திலும், ருதுராஜ் 16வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் தற்போது சரிவை சந்தித்து உள்ளார்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 12 இடங்கள் சரிந்து தற்போது 29 ஆவது இடத்தில் சாம்சன் உள்ளார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா அபாரமாக விளையாடியதன் காரணமாக 59 இடங்கள் முன்னேறி 40 வது இடத்தை பிடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications