மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கடுமையாக தடுமாறி வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி விளையாடிய மூன்று போட்டிகளில் மொத்தமாகவே சேர்த்து ஐந்து ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை நடைபெற்று வரும் நிலையில் டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சரிவை சந்தித்து இருக்கிறார்கள்.

பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் சூரியகுமார் யாதவ் யாருமே தொட முடியாத அளவில் முதல் இடத்தில் 837 புள்ளிகளுடன் இருக்கின்றார். இங்கிலாந்து வீரர் பில் சால்ட் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மூன்றாவது இடத்திலும், முகமது ரிஸ்வான் நான்காம் இடத்திலும் ஆஸ்திரேலியாவின் இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் ஒரு இடம் சரிந்து ஆறாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
இந்திய டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறாத ருதுராஜ் 13-வது இடத்தில் இருக்கிறார். இதேபோன்று ரிங்கு சிங் இரண்டு இடங்கள் சரிந்து 37-வது இடத்தில் உள்ளார். ஒரு காலத்தில் நம்பர் ஒன் வீரராக இருந்த விராட் கோலி தற்போது இரண்டு இடங்கள் சரிந்து தரவரிசை பட்டியலில் 50வது இடத்தை பிடித்திருக்கிறார். இதேபோன்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டு இடங்கள் சரிந்து தற்போது 51 வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
இதைப் போன்று டி20 பந்து வீச்சாளருக்கான தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடத்தில் இந்திய வீரர் அக்சர் பட்டேல் மட்டும் தான் இருக்கிறார். அவர் இரண்டு இடங்கள் சரிந்து ஒன்பதாவது இடத்தில் உள்ளார். ரவி பிஷ்னாய் பன்னிரண்டாவது இடத்திலும் ஆர்ஸ்தீப் சிங் 20-வது இடத்திலும் உள்ளனர். லீக் சுற்றில் விளையாடாத குல்தீப் யாதவ் நான்கு இடங்கள் சரிந்து 31-வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஐம்பதாவது இடத்திலும் முகமது சிராஜ் 60-வது இடத்திலும் உள்ளனர். சிராஜ் இதில் எட்டு இடங்கள் முன்னேறி இருக்கிறார். நடப்பு டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா ஒரு இடம் முன்னேறி 68வது இடத்தில் இருக்கிறார். டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். இலங்கை வீரர் ஹசரங்கா இரண்டாவது இடத்திலும், ஷகிபுல் ஹசன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். நபி மூன்று இடங்கள் சரிந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.