பிரிஸ்பேன் : டி20 உலககோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபில்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து தொடக்க வீரராக டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். வார்னர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மிட்செல் மார்ஷ் 28 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 13 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். எனினும் மறுபுறும் அதிரடியாக விளையாடிய ஆரோன் பிஞ்ச் 44 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். நடுவரிசையில் மார்கஸ் ஸ்டோனிஸ் 25 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். இறுதியில் டிம் டேவிட் 15 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

180 ரன்கள் எடுத்தால வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டர்லிங் 11 ரன்களிலும், கேப்டன் பால்பிரின் 6 ரன்களிலும் ஆட்டமிழக்க அயர்லாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இது போதாது என்று ஆட்டத்தின் 4வது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஆம் கேம்பர், ஜார்ஜ் ஆகியோர் டக் அவுட்டாக அயர்லாந்து அணி 25 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் லார்கன் டக்கர் தனி ஆளாக நின்று அயர்லாந்து அணியின் இன்னிங்சை கட்டமைத்தார். ஆனால் இவருக்கு ஆதரவாக எந்த ஒரு வீரரும் பேட்டிங் செய்யாமல், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டக்கர் மட்டும் 48 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார்.இதில் 9 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் 18.1 ஓவரில் அயர்லாந்து அணி 137 ரன்கள் மட்டுமே அடித்தது.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தது. தற்போது இங்கிலாந்து அணி 3 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. தற்போது இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய வெற்றி பெற்று ரன் ரேட்டை இங்கிலாந்தை விட அதிகரிக்க வேண்டும். எனெனில் இரு அணிகளும் 7 புள்ளிகளுடன் நிறைவு செய்தால், ரன் ரேட் தான் தீர்மானிக்கும்.