ஆஸி.யை அலறவிட்ட ரஷித் கான்.. நடப்பு சாம்பியனின் தலைவிதி இலங்கை கையில்.. இலங்கையும் நாக் அவுட்டானது
அடிலெய்ட் : டி20 உலககோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 2வது இடத்தை பிடித்துள்ளது. குரூப் 1 இல் ஏற்கனவே நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.
எனினும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவின் தலைவிதி இலங்கை கையில் தான் உள்ளது. இதனால் நாளைய ஆட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளது.

தடுமாறிய ஆஸி
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இல்லை. இதனால் தொடக்க வீரராக வார்னர், கிரீன் ஆகியோர் களத்துக்கு வந்தனர். கிரின் 3 ரன்களிலும், ஸ்மித் 4 ரன்களிலும் வெளியேற, வார்னர் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரிகளை விரட்டி 18 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார்.

மேக்ஸ்வெல் அரைசதம்
மிட்செல் மார்ஷ் அரைசதத்தை 5 ரன்களில் தவறவிட்டு பெவிலியன் திரும்ப, அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 32 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். ஸ்டோனிஸ் தன் பங்கிற்கு 25 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. ஆப்கான் வீரர் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போராடிய ரஷித் கான்
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கனி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும், குர்பாஷ் ஆஸி பந்துவீச்சை பறக்கவிட்டார். 17 பந்தில் 30 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தை அவர் அளித்தார்.நடுவரிசையில் குல்பதீன் அபாரமாக விளையாடி 23 பந்தில் 39 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ரஷித் கான் மட்டும் கடைசி வரை போடினார்.

முக்கியமான கடைசி போட்டி
கடைசி ஓவரில் ஆப்கான் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஷித் கான் சிக்சர் , பவுண்டரி என 17 ரன்கள் விளாச, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 7 புள்ளிகளை பெற்றதால், இலங்கை அணி வெளியேறியது. தற்போது இங்கிலாந்து, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வென்றால், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லும். ஒருவேலை இங்கிலாந்து வென்றால், ஆஸ்திரேலியா வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications