ஹாங்சோ : அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் முன் எப்போதும் போல் இல்லாத அளவில் 20 அணிகள் பங்கேற்கின்றன.
50 ஓவர் உலகக் கோப்பை முடிந்த ஆறு மாதத்தில் இந்தத் தொடர் நடைபெறுவதால் இதற்கான அணிகளை கட்டமைக்கும் முயற்சி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இளம் வீரர்கள் அடங்கிய அணி விளையாடி தங்களுடைய திறமையை நிரூபித்தது. இந்த வகையில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டியில் இரண்டாம் நிலை வீரர்களை கொண்ட இந்திய அணி தற்போது சீனாவில் விளையாடி வருகிறது. இதில் நேபாள அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 202 ரன்கள் எடுத்தது.
இரண்டாவதாக பேட்டிங் செய்த நேபாளம் அணி 179 ரன்கள் எடுத்து தோல்வியில் தழுவியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் மூன்று வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் இந்த மூன்று வீரர்களும் அடுத்த டி20 உலக கோப்பையில் நிச்சயம் இடம் பெறுவார்கள் என்பது தெளிவாகிவிட்டது. அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.
தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 8 பவுண்டர்களும் ஏழு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று நடு வரிசையில் ரிங்கு சிங் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவர் 15 பந்துகளில் 37 ரன்கள் விளாசி இருக்கிறார். இதில் இரண்டு பவுண்டரிகளும் நான்கு சிக்சர்களும் அடங்கும்.
இதேபோன்று பந்துவீச்சில் தமிழக வீரர் சாய் கிஷோர் சிறிய மைதானத்தில் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.இதேபோன்று ரவி பிஷ்னாயும் நான்கு ஓவர்கள் வீசி 24 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இதனால் இந்த நான்கு வீரர்களும் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பையில் நிச்சயம் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நான்கு வீரர்களுக்கு பதில் அணியில் இருக்கும் சில மூத்த வீரர்களுக்கு கல்தா கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் வரும் டி20 உலக கோப்பையில் பங்கேற்பது சந்தேகமே.