ICC Ranking : பாகிஸ்தான் வீரரால் தொட முடியாத இடத்தில் சூர்யகுமார்.. ரிங்கு சிங் எந்த இடம்?
மும்பை : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மிக அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்திலேயே நீடித்து இருக்கிறார்.
இதே பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அத்தனை எளிதில் தொட முடியாத இடத்துக்கு சென்று இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். புள்ளிகள் அடிப்படையில் இருவருக்குமான இடைவெளி அதிகரித்து இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தன் முதல் டி20 போட்டி அரைசதம் அடித்த ரிங்கு சிங்கும் அதிரடியாக பத்து இடங்கள் முன்னேறி இருக்கிறார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நடக்க இருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போதும் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் அரைசதம் அடித்து இருந்தனர். அதன் மூலம் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அதிரடியாக புள்ளிகளை பெற்று இருக்கின்றனர்.
சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் குவித்ததன் மூலம் ஒரே போட்டியில் 10 புள்ளிகள் பெற்று 865 புள்ளிகளுடன் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 787 புள்ளிகள் பெற்று இருக்கிறார். இருவருக்குமான இடைவெளி 78 புள்ளிகளாக இருப்பதால் அத்தனை எளிதில் ரிஸ்வான் முதல் இடத்தை பிடிக்க முடியாது. தென்னாப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்கிரம் 758 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
இரண்டாவது டி20 போட்டியில் பங்கேற்காத ருதுராஜ் கெயிக்வாட் ஏழாம் இடத்தில் நீடிக்கிறார். அந்தப் போட்டியில் 29 ரன்கள் எடுத்த திலக் வர்மா பத்து இடங்கள் முன்னேறி 55வது இடத்தில் இருக்கிறார். ரிங்கு சிங் 464 புள்ளிகள் பெற்று 59வது இடத்தில் இருக்கிறார். இரண்டாவது டி20 போட்டியில் பங்கேற்காத நிலையிலும், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரவி பிஷ்னோய் முதல் இடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது டி20யில் 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய தென்னாப்பிரிக்காவின் ஷம்சி பத்தாவது இடத்துக்கு முன்னேறினார்.


Click it and Unblock the Notifications