எத்தனை நாள் கோலி முதல் ரேங்க்-லையே இருப்பார்!! போட்டிக்கு வரும் நியூசிலாந்து கேப்டன்
துபாய் : ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்தில் கோலியை ஒட்டி இருக்கிறார்.
கோலி ஆஸ்திரேலிய தொடரில் சரியாக ஆடாவிட்டால் முதல் இடத்தை இழக்கும் அபாயம் உள்ளது.

கேன் வில்லியம்சன் 2ஆம் இடம்
பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடிய நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த கடைசிப் போட்டியில் 89 மற்றும் 139 ரன்கள் குவித்தார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். இந்த தொடரில் மட்டும் 5 போட்டிகளில் 510 ரன்கள் குவித்தார். இதையடுத்து டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 913 புள்ளிகள் பெற்று, 2ஆம் இடம் பிடித்துள்ளார்.

கேன் வில்லியம்சன் சாதனை
நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஒருவர் தரவரிசையில் 900 புள்ளிகளுக்கு மேல் பெறுவது இதுவே முதல் முறை. நியூசிலாந்தின் தலைசிறந்த பந்துவீச்சாளரான ரிச்சர்ட் ஹாட்லீ பந்துவீச்சு தரவரிசையில் 900 புள்ளிகளுக்கு மேல் பெற்ற நியூசிலாந்து வீரர் ஆவார். அதற்கடுத்து அந்த மைல்கல்லை எட்டியுள்ளது கேன் வில்லியம்சன் மட்டுமே.

கோலியின் முதல் இடத்துக்கு ஆபத்து
கோலி அடிலெய்டு டெஸ்டில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. 3 மற்றும் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார். தற்போது 920 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். கேன் வில்லியம்சன், கோலியை விட வெறும் ஏழு புள்ளிகள் மட்டுமே பின் தங்கி உள்ளார். அடுத்து வரும் போட்டிகளில் கோலி ரன் குவிக்காவிட்டால் வில்லியம்சனிடம் தன் முதல் இடத்தை பறி கொடுக்க வாய்ப்புள்ளது.

புஜாரா நான்காம் இடம்
தடை காலத்தில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் 901 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். நான்காம் இடத்தில் புஜாரா இருக்கிறார். இவர் அடிலெய்டு டெஸ்டில் சதம் மற்றும் அரைசதம் அடித்து அசத்தினார்.


Click it and Unblock the Notifications