7 விக்கெட் வேட்டையாடி.. 7ஆம் இடம் பிடித்த ஷமி.. புலியாகப் பாய்ந்த மயங்க் அகர்வால்.. ஐசிசி தரவரிசை!
Recommended Video
துபாய் : ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 7வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோல துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகவர்வால் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 130 ரன்கள் முன்னிலையில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை சாய்த்த முகமது ஷமி மற்றும் 243 ரன்களை குவித்த மயங்க் அகர்வால் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.
இந்த ஆண்டிற்கான டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 300 புள்ளிகள் பெற்று சர்வதேச போட்டிகளில் தனது வலிமையை மீண்டும் நிரூபித்துள்ளது.

அதிரடி பந்துவீச்சு
இந்தியாவின் சிறந்த பௌலர்களில் ஒருவராக விளங்கிவரும் முகமது ஷமி, தான் பங்கேற்ற சமீபத்திய போட்டிகளில் தனது அதிரடி பந்துவீச்சை ரசிகர்களுக்கு பரிசாக அளித்து வருகிறார்.

அடுத்த இடத்திற்கு முன்னேறினார்
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷமி அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 790 புள்ளிகள் பெற்று அவர் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

11வது இடத்திற்கு முன்னேற்றம்
இதேபோல வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 243 ரன்களை குவித்த துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால், 691 புள்ளிகள் பெற்று 11வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தனது முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் 858 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

8 டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் குவிப்பு
தனது முதல் 8 டெஸ்ட் போட்டிகளிலேயே 858 ரன்களை குவித்து சாதனை புரிந்துள்ள மயங்க் அகர்வால். டான் பிராட்மேன், எவர்டன் வீக்ஸ், சுனில் கவாஸ்கர், மார்க் டெய்லர், ஜியார்ஜ் ஹெட்லே, பிராங்க் வோரல் மற்றும் ஹெர்பர்ட் சட்கிளிப் ஆகிய உலக அளவிலான ஏழு ஆட்டக்காரர்களை தொடர்ந்து 8வது சாதனையாளராக உள்ளார்.

இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் முன்னேற்றம்
ஆல்ரவுண்டர் பிரிவில் ரவீந்திர ஜடேஜா 35வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். இதேபோல இஷாந்த் ஷர்மா 20வது இடத்திற்கும் உமேஷ் யாதவ் 22வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

ஆல்ரவுண்டர் நிலையிலும் முன்னேற்றம்
வேகப்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச அளவிலான பௌலர்களின் 10 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதேபோல ஆல்ரவுண்டர் நிலையிலும் அவர் முன்னேற்றத்தை நிரூபித்துள்ளார்.

திறனை நிரூபித்த இந்தியா
இதேபோல ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 300 புள்ளிகள் பெற்று இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது நடைபெற்றுவரும் போட்டிகளை கணக்கில் கொண்டால் இந்த புள்ளிகள் மேலும் உயரும்.


Click it and Unblock the Notifications