ஸ்டீவ் "ஜாப்" சூப்பர்... நம்பர் 1.. சறுக்கிய கோஹ்லி... 11வது இடத்தில்!
துபாய்: ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தனது அபாரமான ஆட்டம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் விராத் கோஹ்லி 11வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் மாபெரும் தூணாக மாறி வருபவர் ஸ்டீவ் ஸ்மித். இளம் வீரரான தனது அசராத பேட்டிங் திறமையால் அனைவரையும் அதிசயிக்க வைத்து வருகிறார்.
மகா பொறுமையுடன், நிதானத்துடன் களம் காணும் இவர் ஆட்டத்தில் மட்டும் புயலாக மாறி விடுவார்.

அடிச்சா மரண அடி
சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின்போது சிறப்பாக ஆடி 199 ரன்களையும், 54 ரன்களையும் குவித்து அசரடித்தார். தற்போது ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்துள்ளார் ஸ்டீவ்.

17 போட்டி.. 9 சதம்
இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. தற்போது 913 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார் ஸ்டீவ். தொடர்ந்து அபார பார்மில் இருந்து வரும் ஸ்டீவ், 17 டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்கள் போட்டு பிரமிக்க வைத்துள்ளார்.

நம்பர் 2 சங்கக்கரா
தர வரிசைப் பட்டியலில் இலங்கையின் சங்கக்கரா 2வது இடத்திலும், 3வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஏப் டிவில்லியர்ஸும் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 4வது இடத்திலும், இலங்கையின் ஏஞ்சலோ மாத்யூஸ் 5வது இடத்திலும் உள்ளனர்.

ஒரு இந்தியர் கூட இல்லை
டாப் 10 வரிசையில் ஒரு இந்தியர் கூட இல்லை. அதிகபட்சமாக 11வது இடத்தில் விராத் கோஹ்லி உள்ளார். அடுத்து 20வது இடத்தில் முரளி விஜய் இருக்கிறார்.

ஸ்டெய்ன் தொடர்ந்து நம்பர் 1
பந்து வீச்சாளர்களில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். டாப் 10 வீரர்களில் ஒரு இந்தியரும் இல்லை. அஸ்வின் 12வது இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications