ஹாரோ : ஐசிசி உலககோப்பை தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2வது முறையாக லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. சூப்பர் 6 சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளது.
இதில், ஐசிசி தகுதிச் சுற்றின் கடைசி லீக் ஆட்டம் நடைபெற்றது. ஜிமபாப்வே உடன் அடைந்த தோல்வியால் மனமுடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இன்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீசியது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், தங்களுக்கு எது சரியாக வருமோ, அதனை நோக்கி சென்றார்கள். கிரிக்கெட் களத்தில் பேட்டிங் சண்டியர்களாக பார்க்கப்படும் வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து பந்துவீச்சை பொளந்து கட்டினர்.

தொடக்க வீரர் பிராண்டன் கிங் 76 ரன்களும், சார்லஸ் 54 ரன்களும் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தது. புருக்ஸ் 25 ரன்களும், கேப்டன் சாய் ஹோப் 47 ரன்களும் எடுக்க, அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரான் 65 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.
மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். எனினும் கிமோ பால் 25 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விககெட்டு இழப்பிற்கு 374 ரன்கள் சேர்த்தது. 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நெதர்லாந்துக்கு நிர்ணயித்துவிட்டதால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொஞ்சம் தவுலத்தாக திரிந்தனர்.
எனினும் கிரிக்கெட்டில் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று சொல்வார்களே, அது ஏன் என்பதை நெதர்லாந்து வீரர்கள் நிரூபித்தனர். தொடக்க வீரர் விக்ரமஜித் சிங் 37 ரன்கள், மேக்ஸ் 36 ரன்கள் , வீஸ்லி 27 ரன்கள் அந்த அணியின் நட்சத்திர வீரர் பாஸ் டி லீட் 33 ரன்களும் எடுக்க, அனைவரும் தொடக்கத்தை கொடுத்தாலும் பெரிய இலக்கை எட்ட முடியாமல் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தனர்.

இதனால் நெதர்லாந்து அணி 29.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த தேஜா நெமுன்னாரு மற்றும் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஜோடி அதிரயாக விளையாடி ரன்களை சேர்த்தனர். தேஜா 76 பந்துகளில் 111 ரன்களும், ஸ்காட் எட்வர்ஸ் 47 பந்துகளில் 67 ரன்களும் எடுக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட, முதல் ஓவரில் பவுண்டரி அடிக்கப்பட்டதால் நெதர்லாந்துக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.
கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டை வீழ்த்தியதால் போட்டி டிராவை நோக்கி சென்றது. இதனையடுத்து வெற்றியாளர்களை தீர்மானிக்கு சூப்பர் ஓவர் கடை பிடிக்கப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் தான் வெல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், நெதர்லாந்து வீரர் லோகன் வான் பீக், அதிரடியாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிர்ச்சி அளித்தார்.
ஜேசன் ஹோல்டர் வீசிய ஓவரில் 3 சிக்சர், 3 பவுண்டரிகளை அடித்து 30 ரன்களை சேர்த்தார். இதே போன்று லோகன் வான் பீக் சூப் ஓவரை வீசினார். முதல் பந்தில் சிக்சர் சென்றாலும்,அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். இதன் மூலம் நெதர்லாந்து அணி, வெஸ்ட் இண்டீசை சூப்பர் ஓவர் முறையில் வீழ்த்தியது. இது வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.