மகளிர் டி20 உலககோப்பை: 7வது முறையாக வென்று ஆஸ்திரேலிய மகளிர் அணி சாதனை.. பைனலில் இங்கிலாந்து தோல்வி
லண்டன்: மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 7வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க வீரர்களான ஏமி ஜோன்ஸ், டேனி வியாட்-ஹாட்ஜ் பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய வீராங்கனைகளான சோஃபி மோலினக்ஸ் மற்றும் கிம் கார்த் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் அலிஸ் கேப்சி, ஹீதர் நைட் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி தடுமாறியது.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த நேட் ஷிவர்-பிரண்ட் மற்றும் ஃபிரேயா கெம்ப் ஜோடி விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியது. அணியை மீட்டெடுத்த ஷிவர்-பிரண்ட் 53 பந்துகளில் 58 ரன்களும், அதிரடியாக விளையாடிய ஃபிரேயா கெம்ப் 28 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இவர்களின் ஆட்டமிழக்காத 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து அணி 150 ரன்களை எட்ட முக்கியக் காரணமாக அமைந்தது.
151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு பெத் மூனி சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அவர் 49 பந்துகளில் 64 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சோஃபி எக்லெஸ்டோன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து கேப்டன் நேட் ஷிவர்-பிரண்ட் டிஆர்எஸ் (DRS) முறைப்படி எடுத்த சரியான முடிவு மூலம் இந்த முக்கிய விக்கெட் வீழ்த்தப்பட்டது.
அதற்கு முன்னதாக, எலிஸ் பெர்ரி கொடுத்த கேட்ச் வாய்ப்பை சோஃபி எக்லெஸ்டோன் பிடித்ததாகக் கருதப்பட்டது. எனினும், கள நடுவர்களின் சந்தேகத்தின் பேரில் மூன்றாவது நடுவர் பல கோணங்களில் பரிசோதித்தபோது, பந்து தரையில் பட்டது தெரியவந்ததால் அதற்கு 'நாட் அவுட்' வழங்கப்பட்டது. இதனால் இங்கிலாந்து வீராங்கனைகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியை மைதானத்தில் நேரடியாகக் காண 28,887 ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். ஆட்டத்தின் 17வது ஓவரில் ஆஸ்திரேலிய வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது, இங்கிலாந்து அணி ஒரு ஓயிடு வீச பந்து பவுண்டரிக்கு சென்றது. இதன் முலம் 17 பந்துகள் எஞ்சிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், 7 முறை டி20 உலக கோப்பையை வென்று ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications

